வரும் 17ஆம் தேதி அதிமுக பொன்விழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முந்தைய நாளான 16ஆம் தேதி சசிகலா, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். அதனைத் தொடர்ந்து தீவிர சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 16ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடம் செல்லும் சசிகலா மறுநாள் (17ஆம் தேதி) காலை சென்னை தியாகராயநகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்திற்கும், தொடர்ந்து ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்திற்கும் செல்கிறார். அதன்பிறகு, தமிழகம் முழுவதும் சசிகலா சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
சசிகலா தன் தொலைபேசி உரையாடல்களின் போது விரைவில் தொண்டர்களை சந்திப்பேன் எனக் கூறி வந்த ஆடியோக்கள், கடந்த ஜூலை மாதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கொரோனா பாதிப்பு குறைந்ததும் கட்சியினரை நேரில் சந்திக்க போவதாக அவற்றில் தெரிவித்தார். இந்நிலையில், அவருடன் பேசியவர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்கள்.
சென்னைக்கு பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையாகி சாலை மார்க்கமாக வந்த சசிகலாவுக்கு வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தீவிர அரசியலில் ஈடுபடப்போவது உறுதி என அந்த பயணத்தின்போது சொன்னார் சசிகலா, பின்னர் அடுத்த சில வாரங்களில் அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவிப்பு வெளியிட்டார். இதற்கிடையில், நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்தது. அதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் ‘விரைவில் வந்துவிடுவேன்’ எனச் சொல்லி வருகிறார்.
அரசியல் காரணங்களால் சிறையில் இருந்து சென்னை திரும்பியது முதல், சசிகலா ஜெயலலிதா நினைவிடத்துக்கு செல்லாமல் இருந்து வருகிறார். இந்நிலையில்தான் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர், ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு, பின்னர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அதிமுக தொண்டர்களை சந்திக்க இருப்பதாக சசிகலா தெரிவித்திருந்தார்.
தற்போது, அதிமுக தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகும் நிலையில், பொன் விழா ஆண்டு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அக்டோபர் 17ஆம் தேதி பொன்விழா கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், ஜெயலலிதா நினைவிடத்திற்கு 16ஆம் தேதி செல்லும் சசிகலா பின்னர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறார். அந்த சுற்றுப் பணயம் அதிமுக தலைமையில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதியாகி சிறை செல்வதற்கு முன்னர், ஜெயலலிதா சமாதிக்கு சென்ற சசிகலா, சமாதியில் ஓங்கி அறைந்து சத்தியம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
























