லக்கிம்பூர் கேரி சம்பவத்தில், மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனை கைது செய்ய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் ஆதாரமின்றி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருக்கிறார்.
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் வருகையை எதிர்த்தும், வேளாண் மசோதாவைக் கண்டித்தும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சரின் ஆதரவாளர்கள் அவர்கள் மீது கார் ஏற்றிக் கொலை செய்ததில் நடந்த கலவரத்தில் மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். இப்பிரச்னை நாடெங்கும் பற்றியெரிந்தது.
இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து நடந்த விசாரணையில் இந்தப் பிரச்னையில் எத்தனை பேர் கைது செய்யபட்டுள்ளனர் என்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதைத் தெரிவிகக்கோரி உச்ச நீதிமன்றம் உத்தரபிரதேச காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்தது. இதன் எதிரொலியாக லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 6ம் தேதி வரை வெறும் முதல் தகவல் அறிக்கை மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், உச்சநீதிமன்ற அழுத்தத்துக்குப் பிறகு, நேற்று விவசாயிகள் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காரை மோதிய சம்பவத்தில் மேலும் 3 பேரிடம் உத்தரப்பிரதேச காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. மத்திய அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ராவை காவல்துறை தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஆசிஷ் மிஸ்ரா கைது தொடர்பாக பேசிய யோகி ஆதித்யநாத் “லக்கிம்பூர் சம்பவத்தில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது. உ.பி அரசு அதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. ஜனநாயகத்தில் வன்முறைக்கே இடமில்லை, ஒவ்வொருவரையும் பாதுகாப்பது என்று சட்டம் உறுதியளித்திருக்கும் போது, யாராக இருந்தாலும் சட்டத்தை கையில் எடுப்பது தவறு. அதுவே, அழுத்தம் கொடுப்பதற்காக ஒருவர் மீது நடவடிக்கை எடுப்பது நியாயமாகாது. ஆதாரமின்றி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது” என்று தெரிவித்திருக்கிறார்.
மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவை கைது செய்ய வேண்டும் என இந்தியா முழுவது குரல்கள் எழுந்து வரும் நிலையில் யோகியின் இக்கருத்து மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
























