சிவகார்த்திகேயன் கதாநாயகனாக அறிமுகமாகி மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மனம் கொத்திப் பறவை படங்களில் நடித்திருந்தாலும், 2013-ல் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற படமே சிவகார்த்திகேயன் என்ற நடிகனின் பாதையைத் தீர்மானித்த படம். சிவகார்த்திகேயனை மாஸ் ஹீரோவாக்கிய இப்படத்தை பொன்ராம் இயக்கியிருந்தார்.
பொன்ராம், சிவகார்த்திகேயன் கூட்டணியில் ரஜினி முருகன், சீமராஜா படங்கள் வந்திருந்தாலும், முதல் படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஒரு பென்ச் மார்க்காகவே உள்ளது. இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து,பொன்ராம் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 வருவது உறுதி. சிவகார்த்திகேயன் சார் மெச்சூரிட்டி ஆகிவிட்டார். அடுத்து வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 எடுப்போம்” என தெரிவித்துள்ளார்.

இரண்டாம் பாகத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க மாட்டார் என கூறியுள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம்
என்றால் சிவகார்த்திகேயனும், சூரியும்தான் நினைவுக்கு வருவார்கள். அதில்
சிவகார்த்திகேயன் இல்லாமல் சங்கமா என்பதே அவர்களின் வருத்தம்.

சசிகுமார், சத்யராஜ் நடித்திருக்கும் ’எம்ஜிஆர் மகன்’ என்ற படம் இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் படவேலைகள் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. மார்ச்சில்
படம் வெளியாக இருந்த நேரத்தில்தான் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. நல்ல வெளியீட்டு தேதிக்காக காத்திருக்கிறார்கள். தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு படத்தை
பொன்ராம் இயக்கி வருகிறார். இதனையடுத்து அவர் வருத்தப்படாத
வாலிபர் சங்கம் 2 படத்தை இயக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
























