இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தயாராகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இமான் இசையமைக்கிறார். ரஜினி நடிப்பில் இதற்கு முன் வெளிவந்த ‘தர்பார்’ படம் பெரிய அளவிலான வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் அஜித்தை வைத்து வீரம், விஸ்வாசம் போன்ற வெற்றிப்படங்களைக் கொடுத்த சிறுத்தை சிவாவுடன் ரஜினி இணையும்போதே படம் பெரிய வெற்றி பெறும் என்கிற நம்பிக்கையில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இத்திரைப்படத்தின் முதல் சிங்கிள் 6ம் தேதி வெளியிடப்பட்டது. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அப்பாடலைப் பாடியிருந்தார். எனக்காக எஸ்.பி.பி பாடிய கடைசி பாடல் என்பதில் மகிழ்ச்சி என்று ரஜினி அப்பாடல் குறித்து நெகிழ்ந்திருந்தார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் 2 வது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. சாரக் காற்றே என்கிற அப்பாடலை சித் ஸ்ரீராமும், ஷ்ரேயா கோஷலும் இணைந்து பாடியுள்ளனர்.
























