சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே மெட்ரோ நிறுவனம் சார்பில் கட்டப்பட்டு வரும் கட்டடப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் நிதியுதவியுடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் 389.42 கோடி ரூபாய் செலவில் ‘சென்ட்ரல் சதுக்கம்’ என்கிற கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய சதுக்கத் திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். கட்டடப் பணிகள் எவ்வளவு சதவிகிதம் முடிந்திருக்கின்றன. இன்னும் எவ்வளவு காலத்தில் முடிக்கப்படும் என்பதைக் கேட்டறிந்ததோடு, கட்டுமானப் பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் முதன்மைச் செயலாளர், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பிரதீப் யாதவ் ஐஏஎஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
























