புதிதாக பிரிக்கப்பட்ட/உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் அதற்கான பிரச்சாரம் இன்றோடு முடிவு பெற்றது.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக நடைபெறுகின்றன. அதன் முதல் கட்டம் நேற்று முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு 9ம் தேதியன்று நடைபெறவிருக்கிறது. இதன் காரணமாக இன்று மாலையுடன் தோ்தல் பிரசாரம் நிறைவடைந்தது.
இரண்டாம் கட்டத் தேர்தலில், 9 மாவட்டங்களில் 35 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 62 ஊராட்சி வார்டு, 626 ஊராட்சி ஒன்றிய வார்டு, 1,324 கிராம ஊராட்சித் தலைவர், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 34,65,724 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மேலும், நாளை மாலை 5 மணிக்கு மேல் தேர்தலுக்கு தொடர்பில்லாத நபர்கள் ஊராட்சிகளைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் மதுபானக்கடைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
























