உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் போரட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவது மகனின் ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் வருகையை எதிர்த்தும், வேளாண் மசோதாவைக் கண்டித்தும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சரின் ஆதரவாளர்கள் அவர்கள் மீது கார் ஏற்றிக் கொலை செய்ததில் நடந்த கலவரத்தில் மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். இப்பிரச்னை நாடெங்கும் பற்றியெரிந்தது.
கடும் நெருக்கடிகளுக்குப் பிறகு மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, பஞ்சாப் முதல்வர் சரண்தீப் சிங், சத்தீஷ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்குச் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூறினர். குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் நாடெங்கும் குரல் எழுப்பிய நிலையில் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து நடந்த விசாரணையில் இந்தப் பிரச்னையில் எத்தனை பேர் கைது செய்யபட்டுள்ளனர் என்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதைத் தெரிவிகக்கோரி உச்ச நீதிமன்றம் உத்தரபிரதேச காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்தது. இதன் எதிரொலியாக லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று வரை வெறும் முதல் தகவல் அறிக்கை மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், உச்சநீதிமன்ற அழுத்தத்துக்குப் பிறகு, தற்போது விவசாயிகள் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காரை மோதிய சம்பவத்தில் மேலும் 3 பேரிடம் உத்தரப்பிரதேச காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. மத்திய அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ராவை காவல்துறை தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
























