இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை, டெல்லி, பெங்களூரு அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தேர்வாகிவிட்ட நிலையில் நான்காவதாகத் தேர்வாகும் அணி எது என்பதில் மும்பை அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் 13 போட்டிகள் விளையாடிவிட்ட நிலையில் 14வது போட்டிகள் தொடங்கியுள்ளன. அனைத்து அணிகளும் தங்களது கடைசி லீக் ஆட்டத்தை ஆடவிருக்கின்றன. முதல் மூன்று இடங்கள் உறுதியாகி விட்ட நிலையில் நான்காவது இடத்தை யார் பிடித்து ப்ளே ஆஃப் செல்வார்கள் என்பதுதான் பெரும் த்ரில்லாக இருக்கிறது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பெர்ஃபாமன்ஸ் வெகு சுமாராகவே இருந்தது. முக்கியமான வீரர்கள் எல்லோரும் ஃபார்ம் அவுட்டில் இருக்கின்றனர். பல போட்டிகளில் மோசமான முறையில் தோற்றதால் ரன் ரேட்டில் மிகவும் சரிந்திருந்தது. இந்நிலையில் இறுதியாக ராஜஸ்தான் அணியுடன் நடந்த போட்டியில் அந்த அணியை 90 ரன்களுக்குள் சுருட்டி அதனை 8 ஓவர்களிலேயே சேஸ் செய்ததால் ரன் ரேட் உயர்ந்துள்ளது. இதனால் 12 புள்ளிகளோடு ஐந்தாவது இடத்தில் மும்பை அணி இருக்கிறது. அதே 12 புள்ளிகள் பெற்றிருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் கொல்கத்தா அணி நான்காவது இடத்தில் இருக்கிறது.
பஞ்சாப், ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் தங்களது ப்ளே ஆஃப் வாய்ப்பைத் தவறவிட்டு விட்டதால் நான்காவது இடத்துக்கான போட்டியில் கொல்கத்தா, மும்பை அணிகள் இருக்கின்றன. ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பே இல்லை என்றாலும் ப்ளே ஆஃப் சுற்றுக்கான நான்காவது இடத்தைத் தீர்மானிக்கும் புள்ளிகளாக இருக்கின்றன. கொல்கத்தா அணியின் கடைசி போட்டி ராஜஸ்தானுடனும், மும்பை அணியின் கடைசிப்போட்டி ஹைதராபாத் அணியுடனும் நடைபெறவிருக்கின்றன. இந்நிலையில் இன்று ராஜஸ்தானுடன் கொல்கத்தா அணி மோதுகிறது. இப்போட்டியில் கொல்கத்தா தோற்று, நாளை ஹைதராபாத்துடன் மும்பை வென்று விட்டால் மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்று விடும்.
இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று விட்டால் மும்பை அணி ப்ளே ஆஃப் வாய்ப்பைப் பெறுவது கடினமே. ஹைதராபாத் அணியை சொற்ப ரன்களில் சுருக்கி அதனை மிகக்குறைந்த ஓவர்களில் சேஸ் செய்தால் கொல்கத்தா ரன் ரேட்டை மிஞ்ச வாய்ப்பிருக்கிறது. இன்றைய போட்டியை கொல்கத்தா ரசிகர்களை விட மும்பை ரசிகர்களே மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
























