இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா சிறப்புப் பாத்திரத்தில் நடித்துள்ள ‘ஜெய்பீம்’ திரைப்படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கைத் துறை.
‘கூட்டத்தில் ஒருத்தன்’ திரைப்படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல். இவர் சூர்யா – ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனத்தின் சார்பில் ‘ஜெய்பீம்’ என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார். தீபாவளியை முன்னிட்டு வருகிற நவம்பர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள இத்திரைப்படத்தில் சூர்யா சிறப்புக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், மணிகண்டன், ராஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை களமாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்துக்கு தணிக்கைத் துறை ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதற்கு முன் நந்தா மற்றும் ரத்த சரித்திரம் போன்ற சூர்யா படங்களுக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. அத்திரைப்படங்கள் வன்முறையைக் களமாகக் கொண்டவை. ஆனால் ‘ஜெய்பீம்’ என்பது அம்பேத்கரைக் குறிக்கும் சொல் என்பதோடு பழங்குடியினர் சார் அரசியலைப் பேசுவதற்காக ஏ சான்றிதழா என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
























