லக்கிம்பூர் செல்ல ராகுல்காந்திக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் 144 தடை உத்தரவின் விதிமுறைகளைப் பின்பற்றி லக்கிம்பூர் செல்வோம் என ராகுல் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவருக்கு உத்திரப்பிரதேச அரசு அனுமதியளித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூா் மாவட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் போராட்டமாக உருவெடுத்திருக்கிறது. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி காவல் துறையினரால் தடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி, பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று லக்கிம்பூர் கேரி செல்கின்றனர்.
சட்டம் – ஒழுங்கு பிரச்னை காரணமாக ராகுல் உள்ளிட்டோர் லக்கிம்பூர் மற்றும் சீத்தாப்பூர் ஆகிய மாவட்டங்களுக்குச் செல்வதற்கு உத்தரப் பிரதேச அரசு அனுமதி மறுத்துள்ளது. லக்கிம்பூர் மற்றும் சீத்தாப்பூர் ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் சட்டம் – ஒழுங்கு பிரச்னை காரணமாக ராகுல் வருகையை தடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், உத்தரப் பிரதேச அரசு பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவை மீறாமல், லக்கிம்பூர் செல்வோம் என ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். “144 தடை உத்தரவு என்பது 5 பேருக்கு மேல் செல்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். நாங்கள் 3 பேர் மட்டுமே செல்லவிருக்கிறோம். அது குறித்த கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் வேலை அழுத்தத்தை உருவாக்குவது” என ராகுல் காந்தி தெரிவித்திருந்த நிலையில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உத்திரப்பிரதேச அரசு நீக்கியுள்ளது.
இந்நிலையில், தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லக்னோ விமான நிலையத்தை வந்தடைந்தார். அவருடன் பூபேஷ் பாகல், சரண்ஜித் சன்னி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோரும் வந்துள்ளனர்.
























