செம்பரம்பாக்கம் ஏரி சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுள் முக்கியமானது. இதன் பரப்பளவு 6,303 ஏக்கர். 3.6 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. மொத்த நீர் மட்ட உயரம் 24 அடியாக இருந்தாலும், அணையின் பாதுகாப்பைக் கருதி மழை காலத்தில், 21 அடி நிரம்பியவுடனே உபரி நீர் திறந்து விடுவது வழக்கம். இந்தாண்டு, ஜனவரி 5ஆம் தேதி உபரி நீர் திறக்கப்பட்டது. சில நாட்கள் கழித்து, உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் பெய்த மழையால் இரண்டாவது முறையாக உபரி நீர் திறக்கப்பட்டது. கிருஷ்ணா நதி நீரால் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது.
கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிக்கு வினாடிக்கு 715 கன அடி நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. நேற்று காலைமுதல் பெய்த மழையால், ஏரியின் நீர்மட்டம் 21 அடியாக உயர்ந்துள்ளது. 2,840 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது.
செம்பரம்பாக்கம் ஏரியின் காலை நிலவரப்படி மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் 2895 மில்லியன் கன அடி நீரும், நீர்மட்ட உயர்வான 24 அடியில் 21.15 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பொய்ததால் ஒரே நாளில் 50 மில்லியன் கன அடி நீர் உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் ஆங்காங்கே பெய்துவரும் கனமழை காரணமாக, பல்வேறு நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தேனி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் இதுவரை நீர்வரத்தின்றி காணப்பட்ட மஞ்சளாறு அணைக்கு 90கன அடியும், சண்முகா நதி அணைக்கு 10கன அடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே முழுக் கொள்ளளவை எட்டி நிரம்பி வழியும் சோத்துப்பாறை அணைக்கு விநாடிக்கு நீர் வரத்து 197கன அடியாக உள்ளது.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதல் தொடர் மழை பெய்ததால், திருவாரூர் மாவட்டம் மாவூர், கச்சனம், கொரடாச்சேரி, விக்கிரபாண்டியம், இருள்நீக்கி, மன்னார்குடி, கோட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த குருவை நெற்பயிர் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மழை நீரில் மூழ்கியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதால், சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 2,184 கன அடியாக உயர்ந்துள்ளது. நீர் மட்டம் 128 அடியை கடந்துள்ளது. கேரளாவில் தொடர் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
























