தமிழகத்தின் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்க உள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும். மாலை 5 முதல் 6 மணி வரை கடைசி ஒரு மணி நேரத்தில் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மட்டும் வாக்களிக் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களுக்கு திமுக, அதிமுகவினர் பெரும்பான்மையான இடங்களில் நேருக்கு நேர் போட்டியிட்டுள்ளனர். ஊரக உள்ளாட்சித்தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சித்தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.
39 ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இங்கு 78 மாவட்ட கவுன்சிலர்கள், 755 ஒன்றிய கவுன்சிலர்கள், 1,577 கிராம ஊராட்சித்தலைவர்கள், 12,252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 4 வகையான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் – வெள்ளை நிறம், கிராம ஊராட்சி மன்ற தலைவர் – இளஞ்சிவப்பு நிறம், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் (ஒன்றிய கவுன்சிலர்) – பச்சை நிறம், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் (மாவட்ட கவுன்சிலர்) – மஞ்சள் நிறம் ஆகிய வண்ண வாக்குசீட்டுகள் மூலம் வாக்கு செலுத்தப்படுகிறது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் மழைபெய்து வரும்போதிலும் மக்கள் ஆர்வமுடன் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
























