சென்னை ரசிகர்கள் முன்னிலையில் தனது கடைசி ஐபிஎல் போட்டியை விளையாட விரும்புவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி கூறியுள்ளது சென்னை அணி ரசிகர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
தோனி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் என்பதோடு, சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியின் கேப்டன் என்பதும் அவரது அடையாளமாக இருக்கிறது. ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய 2008ம் ஆண்டு முதல் சென்னை அணியின் கேப்டனாக உள்ளார் தோனி. ராஞ்சியைச் சொந்த ஊராகக் கொண்ட தோனிக்கு சென்னை இன்னொரு தாய்வீடாக இருக்கிறது. இதுவரை மூன்று முறை சென்னை அணி கோப்பையை வென்றுள்ளது. மேலும் அதிக ரன்னர் அப் என்பது உள்ளிட்ட பல சாதனைகளை சென்னை அணி படைத்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தோனி ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரோடு அவர் ஐபிஎல் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்று விடுவார் என்று கணிக்கப்பட்ட நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி சென்னை ரசிகர்களை உற்சாகமாக்கியிருக்கிறது.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75-வது ஆண்டு விழா தொடர்பாக இணையம் வழியாக ரசிகர்களுடன் உரையாடினார் தோனி. அப்போது அவர் “என்னுடைய கடைசி ஆட்டத்தில் நான் சென்னைக்காக விளையாடுவதை ரசிகர்கள் நேரில் பார்த்து எனக்கு எனக்குப் பிரியாவிடை கொடுப்பதற்கான வாய்ப்பு நான் சென்னையில் விளையாடும்போதுதான் கிடைக்கப்பெறும். ஆகவே, சென்னையில்தான் எனது கடைசி ஆட்டம் நடைபெறும். அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் நான் விளையாடுவேன்” என்று கூறியிருக்கிறார். இதனைக் கேட்டு தோனி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
























