சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் ’அண்ணாத்த’ படத்தின் பாடல் வெளியாகியுள்ள நிலையில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குறித்து ரஜினிகாந்த் உருக்கமாகத் தன் நினைவைப் பகிர்ந்துள்ளார்.

’அண்ணாத்த’ திரைப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். டி இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. ’அண்ணாத்த’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிருந்திருந்த நிலையில், தற்போது ‘அண்ணாத்த அண்ணாத்த ’ என்ற பாடல் வெளியாகி இருக்கிறது. மறைந்த பாடகர் எஸ். பி.பாலசுப்பிரமணியம் இந்த பாடலை பாடியுள்ளார்.
ரஜினியின் படங்களில் அவரது அறிமுகப் பாடலை பெரும்பாலும் எஸ்.பி.பி.தான் பாடுவார்.பாட்ஷாவில் ’நான் ஆட்டோக்காரன்’, முத்துவின் ’ஒருவன் ஒருவன் முதலாளி’, அருணாச்சலத்தில் வரும் ’அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நான்தாண்டா’. ஆகிய பாடல்கள் ரஜினிக்காக எஸ்.பி.பி பாடிய பாடல்களாகும். ரஜினிக்கு எஸ்.பி.பி பாடினாலே அது சூப்பர் ஹிட்தான் என்ற எதிர்பார்ப்பு இப்போதும் உள்ளது. அந்த வகையில் அண்ணாத்த படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடலும் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பதிவில், “45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்.” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
அண்ணாத்த திரைப்படம் வரும் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
























