ஜப்பான் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஃபுமியோ கிஷிடாவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.
ஜப்பானில் யோஷிஹிடே சுகா கடந்த ஓராண்டாக பிரதமராக இருந்து வந்தார். ஜப்பானை ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சித் தலைவா் பதவியிலிருந்து தற்போது அவர் விலகியுள்ளார். இதனையடுத்து கட்சித்தலைவருக்கும், பிரதமர் பொறுப்புக்கும் நடந்த போட்டியில் ஃபுமியோ கிஷிடா வெற்றி பெற்றுத் தேர்வாகியுள்ளார்.
2012 – 2017 ம் ஆண்டு வரையிலும் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த அவர், நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து பிரதமராக விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.
இந்நிலையில், புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள ஃபுமியோ கிஷிடாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில் ’ஜப்பானின் புதிய பிரதமரான ஹெச்.இ. கிஷிடா ஃபுமியோவுக்கு வாழ்த்துகள். இந்தியா-ஜப்பான் கூட்டுறவை பலப்படுத்தவும் இரு நாடுகளுக்கு இடையேயான அமைதியையும் செழிப்பையும் மேம்படுத்தவும் உங்களுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்’ என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
























