இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவான ‘வாகை சூட வா’ திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி படக்குழுவினர் கேக் வெட்டி அதனைக் கொண்டாடியுள்ளனர்.
விமல் நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான களவாணி படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் தஞ்சை மண்ணின் யதார்த்தத்தோடு அவ்வாட்டார வழக்கில் வெளியான அத்திரைப்படம் நல்ல பொழுதுபோக்கு படமாக அமைந்தது. அத்திரைப்படத்தைத் தொடர்ந்து சற்குணம் – விமல் கூட்டணியில் வாகை சூட வா என்கிற பீரியாடிக் திரைப்படம் 2011ம் ஆண்டு செப்டம்ப 29ம் தேதி வெளியானது.
கல்விதான் வளமான சமூகத்தை உருவாக்கும், அறியாமையின் இருளிலிருந்து நம்மை மீட்கும் என்கிற ஆழமான கருத்தை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டது. குழந்தைத் தொழிலாளர் முறை, கொத்தடிமை முறை ஆகிய பலவற்றைப் பற்றியும் இத்திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. தனியார் தொண்டு நிறுவனம் மூலம் ஓர் குக்கிராமத்துக்கு ஆசிரியராக அனுப்பப்படும் நாயகன் அங்குள்ள குழந்தைகளை எவ்வாறு கல்வியின் பக்கம் நோக்கி இழுக்கிறான் என்பதே கதையின் மையம்.

சமூக விழிப்புணர்வுப் படமான இத்திரைப்படம் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்றது. சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்றதோடு, கலை இயக்கம் மற்றும் இசையமைப்புக்கென வேறு சில விருதுகளையும் பெற்றது. தமிழின் முக்கிய இசையமைப்பாளராகத் திகழும் ஜிப்ரான் இத்திரைப்படத்தின் மூலம்தான் அறிமுகமானார். நாயகி இனியாவும் இத்திரைப்படத்தின் மூலம்தான் அறிமுகமானார். இத்திரைப்படம் வெளியாகி பத்தாண்டுகள் நிறைவடைந்த நிலையில் சமூக வலைதளங்களில் பலராலும் அது கொண்டாடப்பட்டது.
அதனைப் பார்த்த படக்குழுவினரும் அதனைக் கொண்டாட முடிவு செய்தனர். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.முருகானந்தம் ஒருங்கிணைப்பில் இந்த கொண்டாட்டம் நிகழ்ந்தது. விமல், இனியா, இயக்குனர் சற்குணம், இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ், ஸ்டண்ட் டைரக்டர் திலீப் சுப்பராயன், ஆடை வடிவமைப்பாளர் நடராஜன், எடிட்டர் ராஜாமுகமது போன்ற எல்லோரையும் ஒன்றிணைத்து இசையமைப்பாளர் ஜிப்ரான் ஸ்டுடியோவில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
























