டெல்லிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்துள்ளது.
ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற வேண்டுமெனில் மும்பை அணி இந்த போட்டியோடு சேர்த்து மூன்று போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயம் இருக்கும் நிலையில் இன்றைய போட்டி மும்பை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்திருக்கிறது. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சைத் தேர்வு செய்ய முதலில் களமிறங்கியது மும்பை அணி. தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா வெறும் 8 ரன்களில் ஆட்டமிழக்க குவண்டின் டி காக் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் மட்டுமே அதிகபட்சமாக 33 ரன்கள் எடுக்க 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணியால் எடுக்க முடிந்தது.
5 முறை வென்ற சாம்பியன் அணி இந்த ஆண்டு ஃபார்மில் இல்லை என்கிற விமர்சனம் பரவலாக எழுந்து வருகிறது. குறிப்பாக அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான ரோகித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் கூட ஃபார்மில் இல்லை என்று சொல்லப்பட்டது. அதை மெய்ப்பிக்கும் வகையிலேயே இன்றைய ஆட்டம் இருந்தது. இன்று வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் சுற்றில் நுழைவத்ற்கான வாய்ப்பு எளிதில் கிடைக்கும். சேசிங்கில் அதிக வெற்றிகளைப் பெற்ற டெல்லி அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. வாழ்வா சாவா போட்டியில் இந்த ரன்கள் வெகு சொற்பமே எனபதே மும்பை ரசிகர்களின் வேதனையாக இருக்கிறது.
























