நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றன.
கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். இவர் தற்போது விஜய்யை நாயகனாக வைத்து பீஸ்ட் என்று பெயரிடப்பட்டிருக்கும் படத்தை இயக்கி வருகிறார். பூஜா ஹெக்டே இதன் நாயகியாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடல்கள் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பு மட்டுமல்லாமல் பாடல்களும் எழுதி வருகிறார். நெல்சனின் முதல் படமான கோலமாவு கோகிலா திரைப்படத்தில் இடம்பெற்ற ‘எனக்கு இப்போ கல்யாண வயசுதான் வந்திடுச்சுடி’ பாடலை சிவகார்த்திகேயன் எழுதி ஹிட்டானது. அதனைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படத்தில் செல்லம்மா, ஓ பேபி உள்ளிட்ட பாடல்களையும் எழுதியிருக்கிறார். நெல்சன் அனிருத் சிவகார்த்திகேயன் ஆகிய மூவர் கூட்டணி வெற்றி பெற்றுள்ளதால் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்களில் நிச்சயம் இக்கூட்டணி இடம்பெறுவது ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. எத்தனை பாடல்கள் என்கிற விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
























