நீலகிரி மாவட்டம் கூடலூரில் உலவிவரும் ஆட்கொல்லிப் புலியை சுட்டுக்கொல்ல இடப்பட்ட உத்தரவை பாரதிய ஜனதா விரும்பவில்லை என கோவை தெற்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் டி23 என்று பெயரிடப்பட்ட புலி உலவி வந்தது. இதுவரை 4 மனிதர்களையும் 30க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் அப்புலி அடித்துக் கொன்றுள்ளது. இப்புலியின் அச்சம் காரணமாக மக்கள் வெளியே நடமாட பயந்த சூழலில் புலியைப் பிடிக்க வனத்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டது. புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்க கடந்த 24ஆம் தேதி உத்தரவிடப்பட்டது. புலிக்கு மயக்க ஊசி செலுத்த முடியாத காரணத்தால் அதனை சுட்டுக் கொல்ல தமிழக முதன்மை வன அதிகாரி சேகர்குமார் நீரஜ் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வேட்பாளருக்காக பிரச்சாரத்துக்கு வந்த வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் “புலியை சுட்டுக்கொல்லும் உத்தரவை பாரதிய ஜனதா கட்சி எதிர்க்கிறது. புலி என்பது நம் தேசிய விலங்கு என்பதோடு குறைந்த எண்ணிக்கையில் உள்ள உயிரினம். அதனை பொதுமக்கள் உதவியோடு புலியை மீண்டும் காட்டுக்குள் விட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
























