பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருக்கும் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் பந்து வீச்சில் அபாரமான திறன் கொண்டிருப்பதாலும் அவர் இந்திய கிரிகெட் அணியில் இடம்பெறுவார் என்றும் முன்னாள் கிரிகெட் வீரரும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளருமான வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
நேற்று துபாயில் பஞ்சாப் – கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பஞ்சாப் அணியின் வெற்றிக்கு வித்திட்டவர்களில் இவரும் ஒருவர். அதேபோல், சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
அர்ஷ்தீப் சிங் பற்றி முன்னாள் கிரிகெட் வீரர் வீரேந்திர சேவாக் ”அர்ஷ்தீப், ஜாகீர்கானிடம் மூன்று நாட்கள் பயிற்சி பெற்றதாகக் கூறினார். அவர் மூன்று நாட்களிலேயே அவ்வளவு நுணுக்கங்களை உள்வாங்கியிருக்கிறார். அர்ஷ்தீப் பஞ்சாப் அணியின் பலமாக இருக்கிறார். இவரைப் போன்ற இளம் வீரர்களை பிசிசிஐ கவனித்து அவரது திறனை வளர்க்க ஊக்கமளிக்க வேண்டும். அர்ஷ்தீப் ஒரு மிகச்சிறந்த பந்துவீச்சாளர். அவர் தொடர்ந்து கடினமாக உழைத்து தனது திறனை வெளிப்படுத்தினால் நிச்சயம் ஒருநாள் இந்திய அணியில் இடம்பெறுவார்” என்று கூயிருக்கிறார்.
























