ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தேர்வான நிலையில் மற்ற மூன்று இடங்களைப் பெறப்போகும் அணிகள் எவை என்பதற்கான கடும் போட்டி நிலவி வருகிறது.
கடந்த வியாழக்கிழமை நடந்த போட்டியில் ஹைதரபாத் அணியை எதிர்த்து விளையாடிய சென்னை அணி வெற்றி பெற்றதன் மூலம் 18 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டதோடு ப்ளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாகத் தேர்வானது. தற்போது புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகள் பெற்று டெல்லி அணி இரண்டாவது இடத்திலும், 14 புள்ளிகள் பெற்று பெங்களூரு அணி மூன்றாவது இடத்திலும் இருக்கிறது. கொல்கத்தா, பஞ்சாப், மும்பை ஆகிய மூன்று அணிகளும் தலா 10 புள்ளிகள் பெற்றுள்ளன. ரன் ரேட் அடிப்படையில் நான்காவது இடத்தில் கொல்கத்தா அணியும், ஐந்தாவது இடத்தில் பஞ்சாப் அணியும், ஆறாவது இடத்தில் மும்பை அணியும் இருக்கிறன. 8 புள்ளிகளோடு ராஜஸ்தான் அணி ஏழாவது இடத்திலும், 4 புள்ளிகளோடு ஹைதராபாத் அணி கடைசி இடத்திலும் இருக்கின்றன.
இச்சூழலில், டெல்லி மற்றும் பெங்களூரு அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதற்கு வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதால் நான்காவது இடத்துக்கு கொல்கத்தா, மும்பை, பஞ்சாப் ஆகிய மூன்று அணிகளுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது. நேற்று கொல்கத்தா – பஞ்சாப் ஆகிய அணிகள் மோதின. இரண்டு அணிகளுக்குமே இது 12வது ஆட்டம் என்பதால் வென்றாக வேண்டிய மூர்க்கத்துடன் இரு அணிகளும் மோதின. இப்போட்டியில் பஞ்சாப் அணி சேசிங்கில் வெற்றி பெற்றதன் மூலம் பத்து புள்ளிகள் பெற்று ப்ளே ஆஃப் போட்டி வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டது.
இந்நிலையில் இன்று டெல்லி – மும்பை அணிகளுக்கிடையிலும், சென்னை – ராஜஸ்தான் அணிகளுக்கிடையிலும் போட்டிகள் நடக்கவிருக்கின்றன. இவையிரண்டுமே மிக முக்கியமான பேட்டிகள்தான். 10 புள்ளிகளோடு புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கும் மும்பை அணி, டெல்லியை வெல்லுமானால் நான்காவது இடத்தைப் பிடிக்கும். அதன் பிறகு ராஜஸ்தான், ஹைதராபாத் ஆகிய இரண்டு அணிகளுடன் மோதி வெற்றி பெற்றால் 16 புள்ளிகள் பெற்று மும்பை அணி ப்ளே ஆஃப்க்குள் நுழைந்து விடும். கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் தத்தம் மீதமிருக்கும் இரண்டு ஆட்டங்களில் வென்றாலும் 14 புள்ளிகளே பெறும் என்பதால் இப்போட்டி மிக முக்கியமானது.
சென்னை – ராஜஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெறும் போட்டியும் முக்கியமானது. சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்று விட்டாலும் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொள்ள இப்போட்டியில் வென்றாக வேண்டும். இன்றைக்கு நடைபெறவிருக்கும் டெல்லி – மும்பை அணிகளுக்கான முதல் போட்டியில் டெல்லி வெற்றி பெற்றால் 18 புள்ளிகளைப் பெற்று சென்னை அணிக்கு ஈடாக வந்து விடும். சென்னை அணி வெற்றி பெற்றால் மட்டுமே 20 புள்ளிகள் பெற்று முதலிடத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். தோல்வியுறும்போது ரன் ரேட் இறங்கும் என்பதால் யார் முதலிடத்தைப் பிடிப்பார்கள் என்பதை யூகிக்க முடியாது. முதல் போட்டியில் மும்பை அணி தோற்று இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் அணி வென்று விட்டால் ப்ளே ஆஃப் போட்டி வரிசையில் ராஜஸ்தான் அணியும் இணைந்து விடும்.
புள்ளிப்பட்டியலில் உச்சத்தில் இருக்கும் சென்னை, டெல்லி அணிகளே இன்று வெல்ல வேண்டும் என்பதே மற்ற அணியின் வேண்டுதாலாக இருக்கிறது.
























