நீலகிரி மாவட்டம் மசினக்குடி அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவரை ஆட்கொல்லிப் புலி அடித்துக் கொன்றது பரிதாபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் மசினக்குடி காடுகளில் ஆட்கொல்லிப்புலி ஒன்று உலவி வருகிறது. T23 என பெயரிடப்பட்டுள்ள அந்த புலி, இதுவரை 3 மனிதர்களையும், 30க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் அடித்துக் கொன்றுள்ளதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நான்காவதாக ஆடு மேய்க்கச் சென்ற பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை அப்புலி அடித்துக் கொன்றிருக்கிறது. புலியைப் பிடிக்க நடவடிக்கை எடுக்காத மெத்தனத்தாலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த புலி உலவுவதன் காரணமாக வெளியே வருவதற்குக் கூட அச்சப்படும் சூழல் நிலவுகிறது. அப்புலியை சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்க அனுமதி கிடைத்துள்ளதை அடுத்து, கடந்த 25ம் தேதி முதல் அதனை பிடிக்கும் பணி தொடங்கியுள்ளது. முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ் தலைமையில், தமிழ்நாடு மற்றும் வயநாட்டை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறையினர் புலியை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முகம் மற்றும் உடலின் பிற பகுதிகளில் காயங்களோடு இருக்கும் புலி, சோர்வாக தேவன் எஸ்டேட்டில் இருந்து மசினக்குடிக்கு செல்லத் தொடங்கியுள்ளது. அங்கு எப்படியேனும் புலியை உயிருடன் பிடித்து விட வேண்டும் என வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர். இப்படியான சூழலில்தான் இக்கொலை நடந்திருக்கிறது. சீக்கிரம் புலியைப் பிடித்து சென்று விட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
























