சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்பட்ட நிலையில் அதற்கான ஆதாரம் ஏதும் அவரது உடலில் இருந்து கிடைக்கப்பெறவில்லை என்று துறைசார் நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் ராம்குமார் மரணத்தின் பின் உள்ள மர்மம் விலகாமலேயே உள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி சுவாதி என்கிற இளம்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலையை மேற்கொண்டதாக ஜூலை 1ம் தேதி திருநெல்வேலி அருகே மீனாட்சிபுரத்தில் ராம்குமார் என்கிற இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர். சிசிடிவி பதிவை அடிப்படையாக வைத்து இக்கைது நிகழ்த்தப்பட்டது.
கைது செய்ய முற்பட்டபோது ராம்குமார் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறி விசாரணைக்குப் பிறகு அவரை சென்னை புழல் சிறையில் அடைத்தனர். செம்படம்பர் 18ம் தேதி மின்சார வயரை கடித்து மின்சாரம் பாய்ச்சி ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
சுவாதி கொலையை மேற்கொண்டது ராம்குமார்தான் என்பது ஆதாரபூர்வமாக நிருபிக்கப்படவில்லை என்றும் ராம்குமார் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் ராம்குமாரின் வழக்கறிஞர் மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர். ராம்குமாரின் மரணம் மர்மமாகவே இருந்த நிலையில் அதன் ஒரு முடிச்சு தற்போது அவிழ்ந்திருக்கிறது.
ராம்குமாரின் உடல் திசுக்களில் நடத்தப்பட்ட பரிசோதனையின் மூலம், அவர் மின்சாரம் பாய்ந்து இறந்தார் என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என ஹிஸ்தோபாதாலஜி நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர். மாநில மனித உரிமை ஆணையத்தின் முன் ஆகஸ்ட் 18ஆம் தேதி தாக்கல் செய்த அறிக்கையில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை, சுவாதி கொலை வழக்கில் ராம்குமாருக்காக ஆஜரான வழக்குரைஞர் பி. ராம்ராஜ் வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையின் உண்மைத்தன்மை குறித்து மாநில மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் இதுவரை உறுதிசெய்யவோ, மறுக்கவோ இல்லை.
மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் முன் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் அறிக்கையில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அப்போது பேராசிரியர்களாக இருந்த மருத்துவர்கள் டாக்டர். ஆண்டாள் பழனி மற்றும் டாக்டர் வேணு ஆனந்த், 2016ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ராம்குமாரின் உடலை ஆய்வு செய்த போது, அவரது மூளை மற்றும் இதய திசுக்கள் நல்ல நிலையில் இருந்ததைக் கண்டறிந்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், நுரையீரல்கள், கல்லீரல், நாக்கு, உதடுகள், மண்ணீரல், சிறுநீரகங்கள் ஆகியவையும் கூட நல்ல நிலையில் இருந்ததாக சான்றளித்துள்ளனர்.
மின்சாரம் தாக்கியவர்களின் உடலிலிருக்கும் திசுக்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்குமா? என்று மனுதாரர் தரப்பில் எழுப்பப்பட்டிருந்த கேள்விக்கு பதிலளித்த மருத்துவர்கள், பெரும்பாலும் மாற்றம் ஏற்பட்டிருக்கும், ஆனால், இதில் அப்படி ஏற்படவில்லை என்று தெளிவாகக் கூறியுள்ளனர். ராம்குமாரின் உடல் திசுக்களை ஆராய்ந்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததற்கான சாத்தியக் கூறுகள் தென்படவில்லை என்று தங்களது ஆய்வறிக்கையில் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குறுக்கு விசாரணையில், 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி ராம்குமாரின் உடலை சிறையிலிருந்து கொண்டு வந்த போது பணியிலிருந்த ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் அவசரசிகிச்சைப் பிரிவின் மருத்துவ அலுவலர் டாக்டர் சயீத் அப்துல் காதர் கூறுகையில், ராம்குமாரின் உடலை மருத்துவமனைக்குக் கொண்டு வரும் போது சிறை மருத்துவரும் உடன் வந்தார். ஆனால், சிறையில் நடந்த இந்த விபத்துக் குறித்து பதிவுகளின் நகலோ அல்லது சிறையில் ராம்குமாருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கான ஆவணங்களோ சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
“சிறையில் அவருக்கு எந்தவிதமான சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதற்கான எந்த ஆவணங்களும் என்னிடம் வழங்கப்படவில்லை. ராம்குமாருக்கு எந்தவிதமான சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் எனக்குத் தெரியாது. நான் வழங்கிய விபத்து பதிவேட்டிலும், மின்சாரம் தாக்கியதால் ஏற்பட்ட காயங்கள் என்று எதையும் குறிப்பிடவில்லை” என்றார். “அதே வேளையில், ராம்குமாரின் உடலில் விறைப்புத் தன்மை இருந்ததாகவும், ஒருவர் இறந்து 12 மணி நேரத்துக்குப் பிறகே விறைப்புத் தன்மை ஏற்படும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“நான் பார்த்த ஒரு சில காயங்களும், மின்சாரம் தாக்கியதால் ஏற்பட்டவை அல்ல. இருந்தபோதும், உடல் உடற்கூராய்வுக்காக பிணவறைக்கு அனுப்பப்பட்டது, உடலை நான் அவ்வளவு தீவிரமாக ஆய்வு செய்யவில்லை. நான் முதலில் அளித்த தகவலில், தவறுதலாக மின்சாரம் தாக்கியதால் காயம் என்று குறிப்பிட்டுவிட்டேன்” என்று குறுக்கு விசாரணையில் பதிலளித்துள்ளார்.
ராம்குமார் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று ஊடகங்களில் வெளியான செய்திகளைத் தொடர்ந்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் இந்த வழக்கை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. விரைவில் ராம்குமார் மரணத்தின் பின் உள்ள அத்தனை மர்மங்களும் விலகும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
























