தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதன் காரணமாக சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. வெள்ள அபாயம் இருப்பதால் மக்கள் அதற்கு தயார் நிலையில் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பொன்றை வெளியிட்டிருக்கிறது. அச்செய்திக் குறிப்பில் ”இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் 3.1 கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புகள் இருக்கிறது. மேலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இலேசானது முதல் மிதமான அளவு மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
























