இந்தியாவில் விவாகரத்து பெருவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. சாதாரண விஷயங்களுக்காகக் கூட தற்சமயம் விவாகரத்து பெறுவது வழக்கமாகிவிட்டது. என்னதான் அன்பைப் பொழிந்து காதலித்து திருமணம் செய்துகொண்டாலும், அல்லது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டாலும் கணவன் மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு என்று வரும்போது இந்த இரண்டு வகை திருமணங்களும் விவாகரத்திலேயே முடிகின்றன. ஆனால், அதை மறுக்கும் விதமாக புதியதொரு கருத்தை உச்சநீதிமன்றம் தற்சமயம் பதிவிட்டுள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான விவாகரத்துகள் காதல் திருமணங்களால் ஏற்படுவதாகத் தெரிகிறது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருமண தகராறு காரணமாக ஏற்பட்ட இடமாற்றம் தொடர்பான மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு, அந்தத் திருமணம் காதல் திருமணம் என்று வழக்கின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தபோது இந்த அறிக்கையை வெளியிட்டது. இறுதியாக நீதிமன்ற அமர்வு இருவருக்கும் மத்தியஸ்தம் செய்துவைக்க அழைப்பு விடுத்தது.
இந்த மாத தொடக்கத்தில், உச்சநீதிமன்றம் அரசியலமைப்பின் பிரிவு 142(1) இன் கீழ், பரஸ்பர சம்மதம் இருந்தால், திருமணத்தின் “மீளமுடியாத முறிவு” என்ற அடிப்படையில் 6 மாதகாலம் காத்திருக்கவேண்டிய அவசியமின்றி அவர்களுக்கு விவாகரத்து வழங்கலாம் என்று கூறியது.
மேலும், அரசியலமைப்பின் 142 (1) வது பிரிவின் கீழ் தனது முழுமையான அதிகாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் “மீட்க முடியாத முறிவு” என்ற அடிப்படையில் திருமணத்தை கலைக்க உச்சநீதிமன்றத்திற்கு விருப்புரிமை உள்ளது என்றும் பரஸ்பரம் விவாகரத்து வழங்க முடியும் என்றும் தனது தீர்ப்பில் நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.


























