உலகின் மிகவும் பிரபலமான டைட்டானிக் கப்பலின் முழுமையான 3D வடிவமைப்பை வழங்கக்கூடிய முதல் முழு அளவிலான டிஜிட்டல் ஸ்கேன் புகைப்படம், அது கண்டுபிடிக்கப்பட்ட 38 ஆண்டுகளுக்குப் பிறகு தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.

அட்லாண்டிக் கடல் பகுதியில் சுமார் 12,500 அடி ஆழத்திலுள்ள உலகப்புகழ் பெற்ற டைட்டானிக் கப்பலின் பல புகைப்படங்கள் முன்னதாக பலமுறை வெளியாகியுள்ளன. ஆனால் அவை ஏதேனும் ஒரு பகுதியையோ அல்லது சிதைந்த கப்பலின் சிறு துண்டையோ கடலின் மங்கலான நீர் சூழ்ந்து காண்பிக்கும். அந்தவகையில் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ள அதன் ஸ்கேனிங் புகைப்படங்கள் இதுவரை இல்லாத அளவில் தெளிவாக டைட்டானிக் கப்பலைக் காட்டுகிறது.

Magellan Ltd எனும் ஆழ்கடல் ஆராய்ச்சி நிறுவனம் கடந்த ஆண்டு இந்த புகைப்படத்தை எடுத்துள்ளது. சிறப்புக் கப்பல்களிலிருந்து கட்டுப்படுத்தப்படும் நீர்மூழ்கிக்கப்பல்களின் உதவியுடன் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் நீளம் மற்றும் அகலம் சுமார் 200 மணி நேரம் செலவிடப்பட்டு அளக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு கோணத்திலிருந்தும் கப்பலின் சுமார் 7,00,000 புகைப்படங்கள் எடுக்கப்பட்டு இந்த 3D மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பயணத்திற்கான திட்டமிடலுக்கு தலைமை தாங்கிய Magellan Ltd நிறுவனத்தின் ஜெர்ஹார்ட் சீஃபர்ட் கூறும்பொழுது, “சுமார் 4,000 மீ. ஆழத்தில் கப்பல் இருந்தது எங்களுக்கு மிகப்பெரும் சவாலைத் தந்தது. மேலும் நாங்கள் இருந்த இடத்தில் நீரோட்டங்கள் அதிகம் இருந்தன. சிதைந்த கப்பலை சேதப்படுத்திடாதபடி, நாங்கள் எதையும் தொட அனுமதிக்கப்படவில்லை’’ என்று தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக கப்பல் விபத்தை ஆய்வு செய்து வரும் ஆய்வாளர் பார்க்ஸ் ஸ்டீபன்சன், டைட்டானிக்கின் தற்போதைய ஸ்கேன்கள் தான் “சிதைவுகளின் உண்மையான நிலையை” காட்டுகின்றன என்று கூறினார்.



























