தமிழ்நாட்டில் அதிரிபுதியான பல மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. அந்த வகையில் சிவகங்கை, திருப்பூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கடலூர், அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், நாமக்கல், திண்டுக்கல் ஆகிய 16 மாவட்டங்களின் ஆட்சியர்களை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று உத்தரவிட்டார்.
இதில் சிவகங்கை மாவட்ட ஆட்சியராக ஆஷா அஜித்தும், இராமநாதபுரம் ஆட்சியராக விஷ்ணு சந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் சுவாரசியமான விஷயம் என்னவெனில் விஷ்ணு சந்திரனும், ஆஷா அஜித்தும் கணவன் மனைவியாவர்.
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தின் கருநாகப்பள்ளியைச் சேர்ந்த ஆஷா அஜித் கடந்த 2015 ஜூலையில் சிவில் சர்விஸ் தேர்வெழுதி 40வது இடம் பெற்று வெற்றிபெற்றார். இதைத்தொடர்ந்து இவர் சிவகங்கை, தேவகோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் துணை ஆட்சியராக இருந்துள்ளார். மேலும், கேரளாவைச் சேர்ந்த விஷ்ணு சந்திரன் முன்னதாக தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டங்களில் துணை ஆட்சியராகவும், வருவாய்த்துறையிலும் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் தான் கணவன் மனைவியான இருவரும் சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய பக்கத்து பக்கத்து மாவட்டங்களில் ஆட்சியர்களாக பணியமர்த்தப்படுவது மக்களிடையே கவனம் பெற்றுள்ளது.


























