உலகெங்கிலும் உள்ள சிலர் வழக்கத்திற்கு மாறான செயல்களைச் செய்து தனக்கென ஒரு தனி அடையாளத்தை அமைத்துக் கொள்கின்றனர். அப்படி, பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் உலகின் 7 அதிசயங்களை ஒரே வாரத்தில் பார்வையிட்டுள்ளார். மேலும் இந்த செயலுக்காக அந்த நபருக்கு கின்னஸ் உலக சாதனை வழங்கப்பட்டுள்ளது. இவர் சாதனை மனிதர் மட்டுமல்ல… மிகச்சிறந்த மனிதாபிமானியும் கூட…
‘சாகச மனிதர்’ என்று வலைதளங்களில் கூறப்படும் ஜேமி மெக்டொனால்ட் என்ற நபர், ஏழு நாட்களில் உலகின் அனைத்து அதிசயங்களையும் பார்வையிடும் சவாலை ஏற்று வெற்றிகரமாக அதை முடித்துள்ளார். அவர் சீனாவின் பெருஞ்சுவர், இந்தியாவின் தாஜ்மஹால், ஜோர்டானில் உள்ள பெட்ரா, இத்தாலியில் உள்ள கொலோசியம், ரியோவில் உள்ள கிறிஸ்ட் தி ரிடீமர், பெருவில் உள்ள மச்சு பிச்சு மற்றும் மெக்சிகோவின் சிச்செனிட்சா ஆகியவற்றை சரியாக ஆறு நாட்கள், 16 மணி நேரம், 14 நிமிடங்களில் பார்வையிட்டு முடித்துள்ளார்.
மெக்டொனால்ட், இந்த சாதனைக்கான தனது முழுப் பயணத்திற்காகவும் 13 விமானங்கள், 16 டாக்சிகள், 9 பேருந்துகள், 4 ரயில்கள் மற்றும் ஒரு பனிச்சறுக்கு வாகனம் ஆகியவற்றை பயன்படுத்தியுள்ளார். மேலும் நான்கு கண்டங்களில் மொத்தம் 36,780 கி.மீ. தூரம் பயணித்துள்ளார்.
அவரது முதல் இலக்கு சீனாவின் பெருஞ்சுவர். பின்னர் அவர் தாஜ்மஹாலை பார்க்க இந்தியா வந்துள்ளார். இந்தியப் பயணத்திற்குப் பிறகு, அவர் ஜோர்டானுக்கு விமானத்தில் பயணித்துள்ளார். அங்கிருந்து பெட்ரா நகருக்கு பேருந்தில் சென்றுள்ளார். அடுத்ததாக ரோம் சென்று, அங்கு கொலோசியத்தைப் பார்த்துள்ளார். தொடர்ந்து, உலகின் மிகப்பெரிய ஆர்ட் டெகோ சிலையான கிறிஸ்ட் தி ரிடீமரைப் பார்வையிட மற்றொரு விமானத்தில் பிரேசிலுக்குச் சென்றுள்ளார். படிப்பதற்கே தலைசுற்றுகிறதல்லவா… இப்படித்தான் இவர் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இன்னும் முடியவில்லை… பிரேசிலுக்கு அடுத்ததாக அவர் மச்சு பிச்சு மற்றும் சிசென் இட்சாவுடன் தனது பயணத்தை முடித்துள்ளார். அவரது பயணத்திற்கு டிராவல்போர்ட் என்ற நிறுவனம் ஆதரவு அளித்துள்ளது. மெக்டொனால்டின் இந்த உலகம் சுற்றும் பயணம் வெறும் சாதனையை அமைப்பதற்கான ஒரு செயல் மட்டுமல்ல; மாறாக இந்த பயணத்தின் நோக்கம் சூப்பர் ஹீரோ அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்திற்கு பணம் திரட்டுவதாகும்.
ஒன்பது ஆண்டுகளாக syringomyelia என்ற அரிய முதுகெலும்பு நோயால் பாதிக்கப்பட்டு வந்த மெக்டொனால்ட், தனது நோய்க்காலத்தின்போது தனக்கு உறுதுணையாக இருந்து உதவிபுரிந்த மருத்துவமனைக்கு ஏதேனும் கைம்மாறு செய்ய ஆசைப்பட்டுள்ளார். எனவே தான் 2012ம் ஆண்டு முதல், மெக்டொனால்ட் கடுமையான சவால்களை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு நிதி திரட்டத் துவங்கியுள்ளார். மெக்டொனால்ட் வெறும் சாதனையாளர் மட்டுமல்ல, சிறந்த மனிதாபிமானி என்றும் இப்பொழுது புரிகிறதல்லவா!


























