தற்சமயம் வலைதளங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது கத்திமேல் நடக்கும் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. பெருகிவரும் பண மோசடிகள் வாட்ஸ் அப், டெலிகிராம், பேஸ்புக் போன்ற என்ற செயலியையும் விட்டுவைக்காமல் அதனூடாக மக்களை ஏமாற்ற புதுத்துது வழிகளை சிந்தித்துவருகிறது.
அண்மையில் வாட்ஸ் அப் செயலி மூலம் வெளிநாட்டு எண்களைப் பயன்படுத்தி பகுதிநேர வேலை தருவதாகக் கூறி வங்கிக் கணக்குகளிலிருந்து பணத்தைத் திருடும் குற்றங்கள் பற்றிய செய்திகள் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தின. இந்நிலையில், இதேபோன்றதொரு மோசடியில் சிக்கி டெல்லியைச் சேர்ந்த மென்பொறியாளர் ஒருவர் ரூ.42 லட்சத்தை இழந்துள்ளார்.
டெல்லியின் குருகிராம் பகுதியைச் சேர்ந்த மென்பொறியாளர் ஒருவருக்கு, கூடுதல் பணம் சம்பாதிப்பதற்கான பகுதிநேர வேலை வழங்குவதாக கூறி வாட்ஸ் அப்பில் செய்தி வந்துள்ளது. அதன்படி தாங்கள் அனுப்பும் லிங்கில் இருக்கும் யூடியூப் வீடியோக்களைக் கிளிக் செய்து அவற்றிற்கு லைக் போட்டால் ஒரு லைக்கிற்கு ரூ.50 வழங்குவதாகக் கூறப்பட்டுள்ளது. இதை நம்பிய அவர் அதற்கு ஒப்புக்கொள்ளவே, அவரை டெலிகிராம் குரூப் ஒன்றில் சேர்த்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் அதைவிட அதிக பணம் கிடைக்கும் என்று அம்முனையிலிருந்த நபர்கள் இவருக்கு ஆசை காட்டியுள்ளனர். இதை நம்பிய இவரும் தனது மற்றும் தன் மனைவியின் வங்கிக்கணக்குகளிலிருந்த ரூ.42,31,600 பணத்தை அனுப்பியுள்ளார். இதையடுத்து எதிர்தரப்பிலிருந்து எந்த தகவலும் வராத பின் தான், தான் ஏமாற்றப்பட்டது அவருக்குத் தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில், காவலர்கள் இக்குற்றச்செயலில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத அந்நபர்கள் மீது வழக்கு பதிந்து முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்துள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க காவலர்கள் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.


























