பாபி எனப்படும் போர்ச்சுகீசிய இனத்தைச் சார்ந்த நாய் அண்மையில் தனது 31வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளது. தற்போது உலகில் வாழும் மிக அதிக வயதுடைய நாய் என்ற கின்னஸ் உலக சாதனையையும் பாபி படைத்துள்ளது.
பாபியை வளர்க்கும் அதன் உரிமையாளரான கோஸ்டா பல வயதான நாய்களை வைத்திருந்தார். அவற்றில் பாபியின் தாய் கிராவும் ஒன்று. கிரா 18 வயது வரை உயிர்வாழ்ந்தது. ஆயினும் தனது நாய்களில் எந்த நாயும் 30 வயதை எட்டும் என்று அவர் நினைத்திருக்கவில்லை.
பாபி இத்தனை ஆண்டுகாலம் உயிர்வாழ்வதற்கு அது அமைதியான சுற்றுச்சூழலில் வளர்ந்ததே காரணம் என்று கோஸ்டா கூறுகிறார். அவர் பாபியின் வாழ்நாள் முழுவதும் அது சுதந்திரமாக அருகிலிருக்கும் காடுகளில் சுற்றித்திரிய அனுமதித்துள்ளார். இதுவரை பாபியை அவர் கயிற்றாலோ, சங்கிலியாலோ கட்டியதே இல்லையாம்.

ஆயினும் வயது மூப்பு காரணமாக முன்பு போல் பாபியால் நடக்கமுடிவதில்லை என்றும், அதன் பார்வை சற்று மங்கலாக இருப்பதாகவும் கோஸ்டா கூறுகிறார். மேலும் வயதானவர்கள் போல பாபி அதிக நேரம் தூங்குவதாகவும் அவர் தெரிவிக்கிறார். 38 வயதாகும் கோஸ்டா 8 வயது சிறுவனாக இருந்த சமயம், 1992ம் ஆண்டு பாபி பிறந்துள்ளது.
பாபியைப் பார்க்கும்போதெல்லாம் தற்சமயம் காலமாகிப்போன, பாபியின் காலத்தில் வாழ்ந்த தனது சகோதரர், தந்தை மற்றும் தாத்தா, பாட்டி நினைவு தனக்கு வரும் என்று கூறி நெகிழ்கிறார் கோஸ்டா.


























