இயற்கையால் அமைந்த இந்த உலகில் ஒவ்வொரு உயிரினமும் அதைவிட அறிவிலும், வலிமையிலும் பலம்வாய்ந்த உயிரினத்தால் வேட்டையாடப்படுவது இயல்பு. சில நேரங்களில் இவ்வாறு விலங்குகளால் சக உயிரினங்கள் கொல்லப்படுவது பார்க்க திகில் கிளப்புவதாக இருக்கும்.
இவ்வாறு விலங்குகள் வேட்டையாடும் மூர்க்கத்தனமான வீடியோ காட்சிகளை பதிவிட்டுவரும் TerrifyingNature என்ற ட்விட்டர் பக்கம் ஒன்று அண்மையில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் அதிக வைரலானது. அதாவது, ஒரு நீர் நிலையில் மூன்று சிறுவர்கள் குளித்துக்கொண்டிருக்கும் சமயம், திடீரென நீரிலிருந்து கிளம்பும் நீர்யானை ஒரு சிறுவனை வாயால் கவ்வி இழுத்துக்கொள்கிறது. இதைப் பார்த்த மற்ற சிறுவர்கள் அங்கிருந்து சிதறி ஓடுகின்றனர். இந்த வீடியோ நெட்டிசன்களை பெரும் திகிலில் ஆழ்த்தியது.
இயற்கையில் நீர்யானை ஒரு சைவவிலங்கு. அது மாமிசம் உண்ணாது. மேலும் உருவத்தில் பெரிதாக இருந்தாலும் அது அத்தனை மூர்க்கத்தனமான விலங்கு அல்ல. அப்படி இருக்கையில் அது மனிதர்களை எப்படி வேட்டையாடும் என்று பல கருத்துகள் எழுந்தன. இதனிடையே தான் நீர்யானை சிறுவனை விழுங்கவில்லை என்றும், அந்த வீடியோவில் அது நீரிலிருந்து வெளிவரும்போதே மூன்று சிறுவர்களும் அங்கிருந்து தப்பியோடிவிடுவதாகவும் சில கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து வைரலான இந்த வீடியோவிற்கு கீழாக நீர்யானை மூர்க்கமாக நடந்துகொண்ட பல வீடியோக்கள் கருத்துப்பகுதியில் பதிவிடப்பட்டன. அதில் ஒன்றில், ஒரு ஏரியில் படகில் பயணிக்கும் சிலர் அங்குள்ள நீர்யானை ஒன்றை வீடியோ எடுத்துக்கொண்டே போவதும், இதைக் கண்ட நீர்யானை பயமுறுத்தும் வகையில் அந்தப் படகையும் வீடியோ எடுக்கும் நபரையும் கோபத்துடன் தாக்கவருவதுமாக உள்ளது. ஆயினும் விலங்குகளை மனிதர்கள் பொழுதுபோக்குக்காக துன்புறுத்துவதன் காரணமாகவே அவை மூர்க்கத்துடன் நடந்துகொள்வதாகவும் கருத்துகள் உள்ளன.
சைவ விலங்கான நீர்யானைகள் மனிதர்களை விழுங்கிய சில நிகழ்வுகள் உலகின் சில பகுதிகளில் நடந்துள்ளன. உகாண்டா நாட்டில் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை அங்கு வந்த நீர்யானை ஒன்று விழுங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பின் அக்கம்பக்கத்தினர் சிலர் அதன்மீது கற்களை வீசி தாக்கவே குழந்தையை துப்பிவிட்டு அங்கிருந்து அது தப்பியுள்ளது. உலகின் வேறுசில இடங்களிலும் திகிலூட்டும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.


























