டேட்டிங் செயலிகளைப் பயன்படுத்தி இணை அமையாத சிங்கிள் மக்களுக்கான திருவிழா Pear என்ற நிறுவனம் மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு சிங்கிள்களுக்காக நடத்தப்படும் உலகின் முதல் ஒன்றுகூடல் திருவிழா இதுவாகும்.
உலக அளவில் கொரோனா போன்ற நோய்த்தாக்குதல் காரணமாக மக்களைச் சந்திக்கமுடியாமல் திணறிய பலர் டேட்டிங் செயலிகள் மூலம் புதியவர்களிடம் பேசவும், உறவுகளை உருவாக்கிக்கொள்ளவும் முற்பட்டனர். ஆனால், புதியவர்களைத் தேடும் அதே டேட்டிங் செயலியில் பணமோசடி உள்ளிட்ட சம்பவங்களும் நடந்தன. இந்நிலையில் தான் இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க நேரடியாக மக்களைச் சந்தித்து டேட்டிங் செய்யும் PearFest என்ற திருவிழா இந்த கோடையில் கொண்டாடப்படவிருக்கிறது.
PearFest என்பது சிங்கிள்களுக்கான பிரத்தியேக திருவிழா ஆகும். இதில் கலந்துகொள்ளவேண்டும் என்ற Pear நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவேண்டும். மேலும் 25 டாலர் செலுத்தினால் உங்களுக்கு சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான மூன்று மோதிரங்கள் அனுப்பிவைக்கப்படும். இந்த மோதிரம் தான் நீங்கள் இத்திருவிழாவில் கலந்துகொள்வதற்கான நுழைவுச்சீட்டு போன்றது.
இவ்வாறு மோதிரத்திற்காக வசூலிக்கப்படும் பணம் இத்திருவிழாவை நடத்த செலவிடப்படுவதாக இதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த சிங்கிள் திருவிழாவில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா மற்றும் ஆஸ்திரேலியா நாட்டவர்கள் மட்டுமே கலந்துகொள்ளமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பெறப்பட்ட மோதிரத்தை இத்திருவிழாவின் போது விரலில் அணிந்துகொள்வதன் மூலம் சிங்கிளாக இருப்பதைப் பிறருக்குத் தெரியப்படுத்தி அதன் மூலம் புதிய நபர்களை நேரடியாச் சந்தித்து விரும்பியவர்களுடன் டேட்டிங் செய்யமுடியும் என்று இதன் நிர்வாகம் விளக்கமளிக்கிறது. இதன் மூலம் செயலிகளின் அவசியம் இல்லாமல் போய் மக்கள் நேரடியாக ஒருவரையொருவர் சந்தித்து பரஸ்பரம் தங்களைப்பற்றி தெரிந்துகொள்ளமுடியும் என்று இதை ஏற்பாடு செய்திருக்கும் Pear நிறுவனம் தெரிவிக்கிறது.


























