மும்பை, சென்னை, ஹைதராபாத், டெல்லி போன்ற முக்கிய நகரங்களில், கார்ப்பரேட் துறையில் பணிபுரியும் 80 சதவீத ஊழியர்கள், தங்கள் பணிவாழ்க்கையில் சமநிலை அடைவதில் சிரமம் இருப்பதாக தெரிவித்துள்ளது சமீபத்திய கணக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது.
Mental Health and Wellness Quotient @Workplace 2023 என்ற கணக்கெடுப்பு, 3,000 பணியாளர்களிடம், சிறிய பதவியிலான மேலாளர் நிலை முதல் தலைமை நிர்வாக அதிகாரி நிலை வரை, பத்து துறைகள் மற்றும் எட்டு இந்திய நகரங்களில் நடத்தப்பட்டது. இதில் கவலைக்குரிய விதமாக, கடந்த ஆண்டில் 80% ஊழியர்கள், தங்கள் பணிவாழ்க்கையால் தனிப்பட்ட வாழ்க்கையைக் கவனிக்கமுடியாததால் ஏற்பட்ட பணிசார் மனப் பிரச்சினைகள் காரணமாக சுமார் இரண்டு வாரங்கள் வேலையிலிருந்து விடுப்பு எடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மும்பை, கொல்கத்தா, டெல்லி, சென்னை, அகமதாபாத், ஹைதராபாத், புனே மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 90% பேர் விடுமுறையின் போது வேலைசெய்ய நிர்பந்திக்கும் கோரிக்கைகளை எதிர்கொள்வதாக தெரியவந்துள்ளது. இது அவர்களின் பணிவாழ்க்கைச் சமநிலை குறித்த கவலைகளை அதிகரிக்கிறது.
மேலும், 94% ஊழியர்கள் தங்கள் விடுமுறையில் வேலை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், 67% பேர் ஒவ்வொரு முறையும் விடுமுறையில் வேலை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இது முதலாளிகள் ஆரோக்கியமான பணி கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகவும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இதனால் கார்ப்பரேட் ஊழியர்களில் 48%க்கும் அதிகமானோர் மோசமான மன ஆரோக்கியத்தால் ‘ஆபத்தில் உள்ளனர்’ என்று கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுகிறது, மேலும் 56% பெண் ஊழியர்கள் மோசமான மனநல அபாயத்திற்கு ஆளாகிறார்களாம். கணக்கெடுப்பில் கலந்துகொண்டவர்களில், 50%க்கும் அதிகமானோர், இதனால் ஏற்படும் மனஅழுத்தம் அவர்களின் வேலை உற்பத்தித்திறனை கணிசமாக பாதிக்கிறது என்று ஒப்புக்கொண்டுள்ளனர்.
இன்றைய சூழலில், 2 கார்ப்பரேட் ஊழியர்களில் ஒருவர் மோசமான மனநல ஆபத்தில் உள்ளார் என்றும், மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் நடுத்தர அளவிலான ஊழியர்கள் உள்ளனர் என்றும், அவர்களில் 56% பேர் மோசமான மனஆரோக்கியத்தில் உள்ளதாகப் புகாரளிப்பதாகவும் ஆய்வு கூறுகிறது.
இதுகுறித்து எம்பவர் மற்றும் ஆதித்யா பிர்லா கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் நீரஜா பிர்லா, கார்ப்பரேட் ஊழியர்களிடையே சோர்வு மற்றும் மனநல அழுத்தங்கள் இந்தியாவில் ஆபத்தான நிலையை எட்டியுள்ளதாகக் கூறி எச்சரிக்கிறார்.


























