நம் சிறுவயதில் நாம் பார்த்து பரவசப்பட்ட ஜுமான்ஜி சாகசப் படத்தின் காட்சிகளைக் கருப்பொருளாகக் கொண்ட உலகின் முதல் பொழுதுபோக்கு பூங்கா இங்கிலாந்தில் திறக்கப்பட்டுள்ளது. இது இங்கிலாந்தின் Chessington World of Adventures Resort-ல் அமைக்கப்பட்டுள்ளது.
1995ம் ஆண்டு ராபின் வில்லியம்ஸ் கதாநாயகனாக நடித்து ஹாலிவுட் உலகில் வெளியான திரைப்படம் ஜுமான்ஜி. ராபினின் குழந்தைகள் ஒருமுறை தாயம் போன்றதொரு விளையாட்டை விளையாடத் துவங்குகையில் அதில் விழும் எண்ணுக்கு ஏற்றார்போல் ஒவ்வொரு முறைக்கும் புதுப்புது வாக்கியங்கள் வருகின்றன. பின் வாக்கியங்களில் வருவது போன்ற நிகழ்வுகள் அவர்களின் நிஜவாழ்வில் நடப்பது போல் காட்சிகள் சுவாரசியமாக அமைக்கப்பட்டிருக்கும்.
உலக அளவில் பெரும் ஹிட்டடித்த இப்படம் சுமார் 262 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூல் அள்ளியது. இதைத்தொடர்ந்து, ’ஜுமான்ஜி – வெல்கம் டு தி ஜங்கல்’, ’ஜுமான்ஜி – தி நெக்ஸ்ட் லெவல்’ என்ற பெயர்களுடன் மூன்று பாகங்களாக இப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இதைக் கருப்பொருளாக்க் கொண்டு பெரும் பொருட்செலவில், இங்கிலாந்தில் World of Jumanji என்ற பொழுதுபோக்கு பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவில், ஜுமான்ஜி படத்தில் காண்பிக்கப்படும் காட்சிகளை அடிப்படையாகக் கொண்ட சவாரிகள், புதிர்கள் மற்றும் குழப்பமான சவால் நிறைந்த பாதைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர தலைகீழாக புரட்டிப்போடும், தொடங்கிய இடத்திலேயே பல திருப்பங்களுடன் வந்து முடியும் வித்தியாசமான ரோலர் கோஸ்டரும் இங்கு உள்ளதாம். இந்த ரிசார்டில் இதுபோன்றதொரு ரோலர் கோஸ்டர் கடந்த 20 வருடங்களில் பயன்படுத்தப்பட்டதேயில்லை என்று கூறும் இதன் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்காட் ஓ நீல், உலகிலேயே ஜூமான்ஜி கருப்பொருளைக் கொண்ட ஒரே ரோலர் கோஸ்டர் இதுதான் என்று கூறுகிறார்.
இதுதவிர இக்கருப்பொருளைக் கொண்ட ஆறு புதிய ஜுமான்ஜி-தீம் படுக்கையறைகளையும் தங்கள் ஹோட்டலில் இவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த Chessington World of Adventures Resort-ல் 40க்கும் மேற்பட்ட சாகச சவாரிகள் மற்றும் ஏராளமான விளையாட்டுகள் உள்ளதாக இதன் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகிறார்.


























