நீங்கள் தொலைத்த அல்லது திருடுபோன உங்களின் செல்போனை எளிதில் கண்டுபிடிக்க உதவும் மத்திய அரசின் சஞ்சார் சாத்தி sancharsaathi.gov.in என்ற இணையதளம் நாளை துவக்கப்படவுள்ளது.
இந்த இணையதளம் மூலம் தொலைந்துபோன செல்போன்களைக் கண்காணிக்க முடியும். மேலும் உடனடியாக அவற்றைக் கண்டுபிடுத்து பிளாக் செய்ய முடியும். மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த இணையதளத்தை நாளை துவக்கிவைக்கிறார். தற்சமயம் இந்தச் சேவை டெல்லி மற்றும் மும்பை தொலைதொடர்பு வட்டங்களுக்கு மட்டும் வழங்கப்படவிருக்கிறது.
அதிகாரப்பூர்வ தகவல்களின்படி இந்த இணையதளத்தின் உதவியுடன் இதுவரை 4,70,000 தொலைந்த மற்றும் திருடப்பட்ட மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு பிளாக் செய்யப்பட்டுள்ளன. மேலும், இதன் மூலம் 2,40,000க்கும் மேற்பட்ட மொபைல் போன்கள் கண்காணிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதுமட்டுமின்றி, இந்த இணையதளம் மூலம் இதுவரை சுமார் 8,000 போன்கள் மீட்கப்பட்டுள்ளன.
இணையதள உதவியுடன், பயனர்கள் தங்கள் சிம் கார்டு எண்ணை அணுகவும், உரிமையாளரின் ஐடி மூலம் யாராவது அந்த சிம்மைப் பயன்படுத்துவதைக் கண்டறிந்தால் அதை பிளாக் செய்யவும் முடியும். இந்த இணையதளத்தில் காணப்படும் CEIR Module தொலைந்த/திருடப்பட்ட மொபைல் சாதனங்களைக் கண்டறியவும், அனைத்து டெலிகாம் ஆபரேட்டர்களின் நெட்வொர்க்கில் இருந்தும் அதை பிளாக் செய்யவும் உதவுகிறது. இதனால் தொலைந்த/திருடப்பட்ட செல்போன்களை இந்தியாவில் பயன்படுத்த முடியாது. மொபைல்போன் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளருக்குக் கிடைத்ததும் அதன் மீதான தடை இணையதளம் மூலம் நீக்கப்படும்.
மேலும் இதிலிருக்கும் TAFCOP Module, ஒரு மொபைல் சந்தாதாரர் தனது பெயரில் எடுக்கப்பட்ட மொபைல் இணைப்புகளின் எண்ணிக்கையை சரிபார்க்க உதவுகிறது. சந்தாதாரர் பயன்படுத்தாத அல்லது எடுக்காத மொபைல் இணைப்புகளைப் பற்றி புகாரளிக்கவும் இது உதவுகிறது.


























