திருமணம் ஒன்றில் வரதட்சணையாக பைக் வேண்டும் என்று கேட்ட மாப்பிள்ளையை எல்லார் முன்னிலையிலும் செருப்பால் மாமனார் ஆவேசமாகத் தாக்கும் காணொலி இணையத்தில் பேசுபொருளாகிவருகிறது.
நம் இந்தியாவில் வரதட்சணை வாங்கக் கூடாது, கொடுக்கக்கூடாது என்றும், அப்படி வாங்கினால் சட்டப்படி குற்றம் என்றும் சட்டம் இருந்தாலும், பெரும்பாலான திருமணங்களில் வரதட்சணை பொருள் மர்றும் பணவடிவில் வாங்கப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது. இதுபற்றி எத்தனை விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், இந்த சம்பிரதாயத்திற்கு முற்றுப்புள்ளி எதுவும் இன்னமும் ஏற்படவில்லை. ’உங்கள் மகளுக்குத்தானே செய்கிறீர்கள்!’ என்று மாப்பிள்ளை வீட்டாரால் இந்நிகழ்வு நியாயப்படுத்தப்பட்டாலும், வரதட்சணையால் கடனாளியாகி மாண்ட பல குடும்பங்களை நாம் அன்றாடம் பார்த்துவருகிறோம்.
அந்த வகையில், திருமணம் ஒன்றில் மணமகளை தனது வீட்டிற்கு அழைத்துச்செல்லவேண்டும் என்றால் வரதட்சணையாக தனக்கு ஒரு பைக் வேண்டும் என்று கேட்ட மாப்பிள்ளையை செருப்பால் மாமனார் வெளுத்துவாங்கும் காணொலி தான் தற்சமயம் இணையத்தில் வைரல் லிஸ்டில் உள்ளது. திருமணத்திற்கு வந்த அத்தனை பேரும் பார்க்க செருப்பால் மணமகனை தாக்கும் இந்த வீடியோ தான் தற்சமயம், ‘இது சரியா? தவறா?’ போன்ற பல விவாதங்களை தூசுதட்டியெடுத்து கிளப்பியுள்ளது.
இந்த வீடியோவின் கீழான கருத்துகளில், வரதட்சணை கேட்போரை இப்படித்தான் செய்யவேண்டும் என்றும், இதுவே அவர்களுக்கான சரியான ட்ரீட்மெண்ட் என்றும் பதிவிடப்பட்டுள்ளது. மற்றொரு புறம் திருமணமேடை வரை வந்தபிறகு தான் மாமனாருக்கு வரதட்சணை தவறு என்று புத்திவருகிறதா போன்ற கருத்துகளும் காணக்கிடைக்கின்றன.
வரதட்சணை சார்ந்த விவாதங்கள் காலம்காலமாக பேசப்பட்டு நீர்த்துப்போயிருந்த நிலையில், இந்த வீடியோ அதுகுறித்த விழிப்புணர்வையும், அவசியத்தையும் மீண்டும் துவக்கிவைத்துள்ளதாக சிலர் கருத்திட்டுள்ளனர். இதுபோன்ற தடாலடிச் சம்பவங்களே இவர் போன்ற நபர்களுக்கு பாடமாக அமையும் என்பதும் சிலரின் கருத்தாக உள்ளது.


























