68 வயது மூதாட்டி ஒருவர் கோயில் தரிசனத்திற்காக வந்த இடத்தில் தொலைந்துபோன நிலையில், Google Translator உதவியுடன் தனது குடும்பத்தினருடன் போலீசாரால் சேர்த்துவைக்கப்பட்டுள்ளார்.
ஆந்திராவைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி, உத்தரகாண்டில் உள்ள புனித ஸ்தலமான கேதார்நாத்திற்கு தரிசனம் செய்ய குடும்பத்துடன் வந்துள்ளார். வந்த இடத்தில் நிலவிய மோசமான வானிலை காரணமாக மூதாட்டி மட்டும் தனியாக குடும்பத்தினரிடமிருந்து பிரிந்து, இறுதியில் தொலைந்தும் போயுள்ளார். அந்த மூதாட்டிக்கு தெலுங்கைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது.
இந்நிலையில், தொலைந்துபோன அன்றைய நாள் இரவில் குழப்பமான மனநிலையுடன் கௌரிகுண்ட் பகுதியில் சுற்றித்திரிந்த அம்மூதாட்டி அங்குள்ள போலீசாரின் கண்களில் சிக்கியுள்ளார். இதையடுத்து, அவரிடம் தகவல்கள் சேகரிக்க போலீசார் ஆங்கிலத்திலும் இந்தியிலும் பேசியுள்ளனர். ஆனால், தெலுங்கு மட்டுமே தெரிந்த மூதாட்டி இது புரியாமல் விழித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தான் சமயோசிதமாக தொழில்நுட்பத்தை போலீசார் பயன்படுத்தியுள்ளனர். உடனடியாக Google Translator-ஐ ஆன் செய்த போலீசார், மூதாட்டி தெலுங்கில் பேசியதை மொழிபெயர்த்து தகவல்களை சேகரித்துள்ளனர். மேலும் மூதாட்டியிடமிருந்து குடும்பத்தாரின் தொலைபேசி எண்ணையும் பெற்றுள்ளனர்.
தொலைபேசி எண்ணையும், மூதாட்டியின் தகவல்களையும் கொண்டு போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கிய நிலையில், கௌரிகுண்ட் பகுதியிலிருந்து 8 கி.மீ. தொலைவிலிருந்த சோனாப்ரயாக் பகுதியில் குடும்பத்தினர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மூதாட்டியை போலீசார் பத்திரமாக அழைத்துச்சென்று குடும்பத்தினருடன் சேர்த்தனர்.
தகுந்த சமயத்தில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு மூதாட்டியை குடும்பத்துடன் சேர்த்த காவலர்களை நெட்டிசன்கள் வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.


























