நம்மில் பலர் குறிப்பிட்ட ஒரு நபரை மட்டும் கொசு அதிகமாகக் கடிப்பதைப் பார்த்திருப்போம். விளையாட்டாக அந்நபரிடம், ‘உன்னுடைய இரத்தவகை கொசுவுக்கு பிடித்திருக்கிறது போல!’ என்று கூறியிருப்போம். ஆனால், நிஜத்தில் அந்நபரின் இரத்தவகையைவிட அவர் பயன்படுத்தும் சோப்பின் நறுமணம் அக்கொசு அவரைக் கடிக்கக் காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறது நவீன ஆய்வு.
அமெரிக்காவின் வேளாண்மை மற்றும் அறிவியல் கல்லூரியின் வர்ஜீனியா தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இதுபற்றி iScience இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில், குறிப்பிட்ட சோப்பு வகைகளைப் பயன்படுத்தும் ஒரு நபரின் மீது வீசும் நறுமணம் கொசுக்களை ஈர்ப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இதுசார்ந்து 4 பேர் மீதான சோதனையில், சோப்பு பயன்படுத்துவதற்கு முன்பாகவும், சோப்பு பயன்படுத்திய பிறகும் அவர்கள் மீது கொசுக்கள் திறந்துவிடப்பட்டுள்ளன. இதில் சோப்பு பயன்படுத்திய பிறகு அவர்கள் மீது அதிக கொசுக்கள் அமர்ந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் பூவாசம் மற்றும் சிலவகை பழவாசத்தினாலான சோப்புகள் அதிக கொசுக்களை ஈர்ப்பதாகவும் தெரியவந்துள்ளது.
ஆச்சர்யப்படும் வகையில் தேங்காய் எண்ணெயிலிருந்து பெறப்படும் சில அமிலங்கள் மூலம் தயாரிக்கப்படும் சோப்புகள் கொசுக்களை தள்ளிவைக்கிறதாம். இவ்வாறு தேங்காயின் மூலம் தயாரிக்கப்படும் சோப்பின் வாசத்தை கொசுக்கள் வெறுப்பதாகவும், அவற்றை அதிலிருந்தும் தூரமாக்குவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.


























