ஜப்பானைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவர் மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், புற்றுநோய் சிகிச்சையான கீமோதெரபியின் போது ஏற்படும் பக்கவிளைவுகளை தடுக்க மினோசைக்ளின் என்ற மருந்தை உட்கொண்டுள்ளார்.
இம்மருந்தை தொடர்ந்து உட்கொண்டுவந்துள்ள நிலையில், அப்பெண்ணின் நாக்கு கருப்பாக மாறியுள்ளது. மேலும் அவரது நாக்கில் முடி முளைக்கத் துவங்கியுள்ளது. பொதுவாக வாய் சுத்தம் இல்லாத, புகைபிடிக்கும் பழக்கம் உடையோருக்கு இவ்வாறான பக்கவிளைவுகள் ஏற்படும் என்று தெற்கு ஜப்பானின் ஃபுகுவோகா பல்கலைக்கழகம் தெரிவிக்கிறது. நோயாளி மற்றும் அவரது நாக்கின் புகைப்படங்கள் பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் கேஸ் ரிப்போர்ட்ஸில் பகிரப்பட்டன. மேலும் நோயாளியின் முகத்தில் தோல் சாம்பல் நிறத்தில் மாறியுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறினர்.
இதுகுறித்த பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலின் அறிக்கையின்படி, “உடல் பரிசோதனையின்போது, அவரது முகத்தில் சாம்பல் நிற ஹைப்பர்பிக்மென்டேஷன் காணப்பட்டது. முன்னதாக இதுபோல் நாங்கள் கண்டதில்லை. அவரது வாயை பரிசோதித்தபோது, ஒரு பழுப்பு-கருப்புத் திட்டு மற்றும் முடிபோன்ற அமைப்பு அவரது நாக்கின் மேற்புறத்தை மூடியிருந்தது. மேலும் அது அவருக்கு வலிதருவதாக இருந்தது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண், வெவ்வேறு மருந்துகளைப் பயன்படுத்தத் தொடங்கிய நிலையில், ஆறு வாரங்களில் அவரது முகத்தோலின் நிறம் மற்றும் முடிகள் நிறைந்த நாக்கு ஆகியவற்றில் நேர்மறையான மேம்பாடுகள் தெரிந்ததாக மருத்துவ இதழில் அறிக்கை குறிப்பிடப்பட்டது.
Filiform papillae எனப்படும் நாக்கின் மேற்பரப்பில் ஏற்படும் சிறிய கூம்பு வடிவ புடைப்புகள் உடையாதபோது அது கருப்புநிற முடிகளாக நாக்கில் படர்கிறது. அவை சுமார் 1 மில்லிமீட்டர் நீளமாக வளரும். நாக்கின் மேற்பகுதி வழக்கமான பராமரிப்புகளுக்கு உட்படுத்தப்படவில்லை என்றால், உதாரணமாக, பல் துலக்குதல், நாக்கை சுத்தப்படுத்துதல் ஆகியவை செய்யப்படவில்லையெனில் இந்த papillae-க்கள் சுமார் 18 மில்லிமீட்டர் நீளம் வரை வளரும்.


























