அண்மைக்காலமாக வாட்ஸ்-அப் செயலி மூலம் புதியவகை மோசடி ஒன்று துவங்கப்பட்டுள்ளது. +84, +62, +60 என்ற எண்களில் தொடங்கும், வெளிநாட்டு எண்களைப் பயன்படுத்தி பகுதிநேர வேலை இருப்பதாகக் கூறி, ’செய்ய விருப்பமா?’ என்று குறுஞ்செய்தி மூலம் அந்த முனையிலிருந்து கேட்கப்படுகிறது. ஒருவேளை ’செய்யத் தயார்’ என்று நம் முனையிலிருந்து பதிலளிக்கப்படும் பட்சத்தில், யூடியூப் வீடியோக்களைப் பார்த்து அதற்கு லைக் போடவேண்டும், சில கோப்புகளைக் கொடுத்து அவற்றை டைப் செய்து கொடுக்கவேண்டும் என்று சில பணிகள் தரப்படுகின்றன.
இவ்வாறு செய்யப்படும் வேலைகளுக்கு ஊதியம் என்றவகையில் குறிப்பிட்ட தொகையைத் தருவதாகக் கூறி, நமது வங்கிக் கணக்கு உள்ளிட்ட விபரங்களைப் பெற்று மோசடிக்காரர்கள் மூலம் நம் பணம் திருடப்படுகிறது. இவ்வாறு பலபேருடைய வங்கிக்கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டுள்ள நிலையில், புது எண்களிலிருந்து வரும் குறுஞ்செய்திகளை திறக்கவேண்டாம் என்றும், இவ்வாறு பகுதிநேர வேலை தருவதாகக் கூறி குறுஞ்செய்திகள் வந்தால் அந்த எண்ணை Block செய்யுமாறும் காவல்துறையினர் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில், வாட்ஸ் அப்பை களமாகக் கொண்டு துவங்கப்பட்டுள்ள இந்த மோசடி குறித்து அதன் தாய் நிறுவனமான மெட்டா என்ன கூறுகிறது?
இதுபற்றி மெட்டா நிறுவனம், இதுபோன்ற அழைப்புகளைப் புகாரளித்து அவற்றை Block செய்யுமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. ’’பயனர்கள் அறியப்படாத சர்வதேச அல்லது உள்நாட்டு தொலைபேசி எண்களிலிருந்து அழைப்புகளைப் பெறும்போதும், சந்தேகத்திற்கிடமான செய்திகள்/அழைப்புகளை Block செய்வது மற்றும் அதுகுறித்து புகாரளிப்பது, இதுபோன்ற மோசடிகளைத் திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கு ஒரு முக்கியமான படியாகும்” என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
மேலும், ‘’எங்கள் பயனர்களை எங்கள் தளத்தில் பாதுகாப்பாக வைத்திருக்க, செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற அதிநவீன தொழில்நுட்பத்தில் நாங்கள் தொடர்ந்து முதலீடு செய்துள்ளோம். IT விதிகள் 2021ன் படி நாங்கள் வெளியிடும் எங்கள் மாதாந்திர பயனர் பாதுகாப்பு அறிக்கையில் பயனர் புகார்களின் விவரங்கள் உள்ளன. எங்கள் தளத்தில் இதுபோன்ற மோசடிகளை எதிர்த்துப் போராட வாட்ஸ்அப் அதற்குரிய நடவடிக்கை எடுத்துள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் 4.7 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்துள்ளது,” என்று மெட்டா நிறுவனம் கூறியுள்ளது.


























