படிப்பிலும் லட்சியத்திலும் ஆர்வம் இருந்தால் தடைக்கல் கூட படிக்கல் தான் என்பதை தன்னுடைய வெற்றியின் மூலம் நமக்கு காட்டுகிறார் 27 வயதான போந்தா திருப்பதி ரெட்டி.
ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த பொசுபல்லி என்ற கிராமத்தில் வசிக்கும் இவர் எந்தவொரு சிறப்பு வகுப்பிற்கும் செல்லாமல் 2 தேர்வுகளில் வெற்றிபெற்று இரயில்வேயின் பணிகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எப்படி என்கிறீர்களா
திருப்பதியின் குடும்ப பொருளாதார சூழல், அவரை இரயில்வே தேர்வுகளுக்கான பிரத்தியேக பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வதிலிருந்தும் தடுத்துள்ளது. இந்நிலையில் தான் யூடியூப் மூலம் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத் தேர்வுகளுக்கு அவர் தயாராகத் துவங்கியுள்ளார். யூடியூபின் பல்வேறு சேனல்கள் மூலம் போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான பொதுஅறிவு (ஜி.கே), பகுத்தறிவு மற்றும் பிற பாடங்கள் குறித்த வீடியோக்களைப் பார்த்துள்ளார்.
இளங்கலை அறிவியல்(Bsc) பட்டப்படிப்பை முடித்த பிறகு, திருப்பதி RRB(Railway Recruitment Board) தேர்வுக்குத் தயாராகத் தொடங்கினார். இந்நிலையில் தான் யூடியூப் மூலம் தான் பெற்ற பயிற்சியைக் கொண்டு தேர்வுகளைச் சந்தித்து தற்சமயம் தென்மேற்கு ரயில்வேயில் (SWR)-பெங்களூரு பிரிவில் கிரேடு-4 உதவியாளராகவும், கமர்ஷியல் கம் டிக்கெட் எழுத்தராகவும் (CCTC) இரண்டு வேலைகளைப் பெற்றுள்ளார். இம்மாத இறுதியில் வேலைகளுக்கான பணி நியமன ஆணையை எதிர்பார்ப்பதாக திருப்பதி தெரிவித்தார்.
மேலும், ’’எனது குடும்பத்தின் பொருளாதார நிலை சரியில்லாததால் நான் பயிற்சிக்கு செல்ல விரும்பவில்லை. மேலும், எனது தந்தையை அனைத்து விவசாய வேலைகளையும் தனியாக செய்ய விட நான் விரும்பவில்லை. எனவே, எனது கிராமத்தில் எனது குடும்பத்தினருடன் தங்கி தேர்வுக்கு தயாராக முடிவு செய்தேன்’’ என்று திருப்பதி கூறினார்.
சிறுவயதிலிருந்தே திறமையான மாணவராக இருந்த திருப்பதி, விவசாய வேலைகளையும், படிப்பையும் ஒருங்கே சேர்த்து செய்துள்ளார். வீட்டில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், தோட்டத்துக்கு அருகில் உள்ள சிவாலயத்தில் புத்தகங்களை வைப்பதாகவும், மொபைல் நெட்வொர்க் நன்றாக வேலைசெய்வதால், கோவிலின் மூலையையே தனது படிப்பிடமாகக் கொண்டு படித்ததாகவும் திருப்பதி தெரிவிக்கிறார்.
தினமும் 10 முதல் 12 மணிநேரம் வரை படிப்பில் கவனம் செலுத்தும் திருப்பதி, இரவு 7 மணிமுதல் 11 மணிவரை யூடியூபில் குறிப்பெடுத்து படித்துவந்துள்ளார். பணியில் சேர்ந்தபின் கிராமப்புற ஏழைப் பின்னணியிலிருந்து வரும் மாணவர்களை முன்னேற்றப் பாடுபடுவேன் எனத் திருப்பதி தெரிவிக்கிறார்.


























