அமெரிக்காவின் உடாஹ் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் இறந்ததையடுத்து, வேதனை பொறுக்காமல் இறப்பு குறித்து புத்தகம் ஒன்றை எழுதிய நிலையில், போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் கைதுக்குக் காரணம் என்ன?
கவுரி டார்டென் ரிச்சின்ஸ் என்ற 33 வயது பெண் தனது கணவர் எரிக் ரிச்சின்சை விஷம் வைத்துக் கொன்றதாக கைது செய்யப்பட்டார். மூன்று குழந்தைகளுக்கு தாயான கவுரி மீது போதைப்பொருட்களைப் பதுக்கிவைத்திருந்ததாக மேலும் 3 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. நடந்தது என்ன?
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஓர் நள்ளிரவில், தனது கணவரான எரிக் ரிச்சின்ஸ் சுயநினைவின்றி படுக்கையறையில் கிடப்பதாக டார்டென் ரிச்சின்ஸ் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதுகுறித்து தனது கணவர் சுய நினைவின்றி ஆவதற்கு முன்னதாக அவருக்கு வோட்கா பானத்தை பருக அளித்ததாக டார்டென் ரிச்சின்ஸ் அதிகாரிகளிடம் கூறியுள்ளார். பிறகு தான் எரிக் ரிச்சின்ஸ் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடலில் பெண்டானில் எனும் பொருள் அபாய அளவாக 5 மடங்கு கலந்துள்ளதாகவும், அதனாலேயே அவர் இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தான் மனைவி ரிச்சின்ஸ், எரிக் ரிச்சினைக் கொல்ல வெளியில் சிலரைத் தொடர்புகொண்டு வீரியம் மிக்க போதைப் பொருட்களைக் கேட்டதும், அதைச் சிறுகச்சிறுக அவருக்குக் கொடுத்து கொன்றதும், பின் தனக்கு ஒன்றுமே தெரியாதது போல் எரிக் இறந்த பின் போலீசாருக்கு தகவல் கொடுத்ததும் அம்பலமாகியுள்ளது.
இதனிடையே கணவர் இறந்தது குறித்து “Are You With Me?” என்ற புத்தகத்தையும் மனைவி ரிச்சின்ஸ் எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தை ஏன் எழுதினீர்கள் என்ற ஊடகம் ஒன்றின் கேள்விக்கு, அந்தப் புத்தகம் தனக்கும் தனது மூன்று குழந்தைகளுக்கும் அமைதியைக் கொண்டுவருவதாகவும், இது தங்கள் குடும்பத்திற்கு மட்டுமின்றி, தந்தையையும், கணவனையும் இழந்து வாடும் மற்ற குடும்பங்களுக்கும் ஆறுதல் அளிப்பதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார் இந்த சாஃப்ட் வில்லி. பின்னர் தான் தெரிந்துள்ளது, கணவனைத் தான் கொன்றதைப் பற்றி யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்றே இந்தப் புத்தகத்தை அவர் எழுதியுள்ளார் என்று!


























