இந்தியாவில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோருவதற்கான மனுக்களின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வின் முன்னிலையில் 9வது நாளாக இதன் விசாரணை நடைபெற்றது.
விசாரணையின்போது, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஒருபாலின திருமணங்களுக்கான மனுக்களுக்கு எதிராக வாதிட்டது. இதற்கு, தனிநபர் குழந்தைகளை தத்தெடுக்க அனுமதிக்கும் போது, லிவ்-இன் அல்லது ஓரினச்சேர்க்கை தம்பதிகளை ஏன் அனுமதிக்க முடியாது என்று நீதிமன்றம் கேட்டது.
முன்னதாக, NCPCR சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, ஒரே பாலின தம்பதியினரால் வளர்க்கப்படும் குழந்தைகளின் நலனில் மோசமான தாக்கம் ஏற்படுவதாக வலியுறுத்தினார். மேலும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான திருமணத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக விதிமுறைகளில் தலையிட வேண்டாம் என்றும் நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள் அமர்வு, ’’ஒரு தனிநபர் ஒரு குழந்தையை தத்தெடுக்கலாம். ஒருவேளை அந்த நபர் லிவ்-இன் அல்லது ஓரினச்சேர்க்கை உறவில் ஈடுபட்டாலும், அது தகுதி நீக்கம் ஆகாது மற்றும் அந்தக் குழந்தையை அவரிடமிருந்து பிரிக்கமுடியாது. குழந்தைகளின் நலன் முதன்மையானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நலனை உறுதி செய்வதற்கான பாதைகள் ஏராளம். ஒரு தனிநபர் குழந்தையை தத்தெடுக்க சட்டம் அனுமதிக்கும் போது, லிவ்-இன் அல்லது ஒரே பாலின தம்பதியினரை ஏன் தத்தெடுக்க அனுமதிக்க முடியாது?’’ என்று குறிப்பிட்டது.


























