தெரியாத இடங்களிலோ, ஆபத்தான பகுதிகளிலோ தவறுதலாக சிக்கிக்கொண்டால் எதையெல்லாம் தின்று உயிர்வாழலாம் என்று கற்றுத்தரும் பேர் கிரில்சின் மேன் வெசஸ் வைல்ட் தொடரை நாம் பார்த்திருப்போம். உயிருக்கு ஆபத்தெனில் தனது சிறுநீரையே கூட குடிக்கலாம் என்று பேர் கிரில்ஸ் கூறியிருப்பார். ஆனால், நிஜத்தில் நடந்த ஒரு நிகழ்வில் பெண் ஒருவர் உயிர்வாழ வேறு ஒன்றைக் குடித்துள்ளார். அதுவும் பல நாட்களுக்கு…!
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லில்லியன் இப் என்ற 48 வயது மதிக்கத்தக்க பெண், அங்குள்ள விக்டோரியா பகுதியின் பிரைட் என்ற நகரத்திற்கு தனது தாயைப் பார்க்கச்செல்ல காரை எடுத்துள்ளார். அவர் பயணித்தது ஒரு அடர்ந்த புதர்கள் நிரம்பிய வழித்தடமாகும்.
இந்நிலையில், தவறான ஒரு டர்னிங் காரணமாக அடந்த புதர்கள் இருந்த அவ்வழியின் சேற்றில் அவர் சிக்கிக்கொண்டுள்ளார். ஆளறவமற்ற அப்பகுதியில் யார் கண்களுக்கும் புலப்படாத வகையில் அவர் அப்புதர்களுக்கு மத்தியில் சிக்கிக்கொண்டு உதவி கேட்டுள்ளார். ஆனால், அவரது குரல் யாருக்கும் கேட்கவில்லை. இந்நிலையில் லில்லியன் காணாமல் போனதாக அவரது உறவினரிடமிருந்து போலீசாருக்கு புகார் சென்றுள்ளது. இதைத்தொடர்ந்து 5 நாட்கள் கழித்து நகரப்பகுதிலிருந்து 37 மைல் தொலைவில் சிக்கிக்கொண்டிருந்த அவர் பலவீனமான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
லில்லியன் அன்றைய தினம் தனது தாய்க்கு வழங்கவேண்டி ஒரு பாட்டில் மதுவை தனது காரில் வைத்துள்ளார். மேலும் சில லாலிபாப்களையும், தின்பண்டங்களையும் வைத்திருந்துள்ளார். இந்நிலையில் தான், சிக்கிக்கொண்ட இடத்தில் தண்ணீர் எதுவுமே கிடைக்காத பட்சத்தில் தான் வைத்திருந்த மதுவைக் குடித்தும், இனிப்புகளைத் தின்றும் அத்தனை நாட்கள் அவர் அங்கு உயிர்பிழைத்துள்ளார். இத்தனைக்கும் லில்லியனுக்கு மது அருந்தும் பழக்கமே இல்லையாம்.
இதைத்தொடர்ந்து மீட்கப்பட்ட லில்லியன், ’’நான் இறந்துவிடுவேன் என்று நினைத்தேன். என் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமானது. போலீசார் என்னை மீட்கவில்லையெனில் நான் அங்கேயே உறைந்து போயிருப்பேன்’’ என்று கூறினார்.


























