இரண்டு ஆண் சிவிங்கிப்புலிகளுடன் கட்டாயப்படுத்தப்பட்டு இனப்பெருக்கத்தில் ஈடுபடுத்தப்பட்ட தக்ஷா என்ற சிவிங்கிப்புலி காயங்கள் காரணமாக மரணமடைந்துள்ளது. கடந்த 50 நாட்களில் இது சிவிங்கிப்புலிகளின் 3வது மரணமாகும்.
70 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் அழிந்து போன உலகின் அதிவேகமாக ஓடக்கூடிய விலங்கான சிவிங்கிப் புலிகளின் எண்ணிக்கையைப் புதுப்பிக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் ’Project Cheetah’ எனப்படும் லட்சிய திட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், நினைத்ததற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட சிவிங்கிப்புலிகள் ஒன்றன்பின் ஒன்றாக இறப்பது இத்திட்டத்திற்கு அடிமேல் அடியாக உள்ளது.
மத்தியப்பிரதேசத்தின் குனோ தேசியப்பூங்காவில் ’தக்ஷா’ என்ற சிவிங்கிப்புலி கடந்த செவ்வாயன்று காலை 10.45 மணிக்கு காயமடைந்ததை கண்காணிப்புக் குழு கண்டுபிடித்ததாக இந்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், தக்ஷாவிற்கு கால்நடை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், சிகிச்சைப் பலனின்றி அதே நாளில் நண்பகல் 12 மணியளவில் தக்ஷா இறந்துவிட்டதாகவும், பெண் சிறுத்தையான தக்ஷா ஆண் சிவிங்கிப்புலிகளுடன் மூர்க்கத்தனமான வகையில் இனச்சேர்க்கையில் ஈடுபட்டதன் காரணமாக காயங்கள் ஏற்பட்டு இறப்பெய்தியுள்ளதாகவும், அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
இதுவரை குனோ தேசியப்பூங்காவில் இறந்துள்ள 3 சிவிங்கிப்புலிகளில் தக்ஷாவுடன் சேர்த்து 2 தென்னாப்பிரிக்காவிலிருந்தும் மற்றொன்று நமீபியாவிலிருந்தும் கொண்டுவரப்பட்டவையாகும். இதில் முதல் சிவிங்கிப்புலி சிறுநீரக செயலிழப்பு காரணமாக கடந்த மார்ச்சில் உயிரிழந்தது. மற்றொன்று தசை நோய் காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் இறந்துபோனது.
இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் 8 மற்றும் கடந்த பிப்ரவரியில் 12 என்ற எண்ணிக்கையில் சிவிங்கிப்புலிகள் கொண்டுவரப்பட்டன. இந்நிலையில், தெற்காசியாவிற்கு சம்பந்தமில்லாத ஆப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட சிவிங்கிப்புலி இனங்களை இந்தியாவில் பிரதமர் மோதி அறிமுகம் செய்வதற்கு எதிராக வனவிலங்கு பாதுகாப்பாளர்கள் கேள்வியெழுப்பிவருகின்றனர்.


























