2020ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி உலகில் 13.4 மில்லியன் குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது; மேலும் அவர்களில் 45% பேர் இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் உட்பட ஐந்து நாடுகளில் மட்டுமே பிறந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் கூட்டணி அமைப்புகள் வெளியிட்ட அறிக்கை மூலம் தெரியவருகிறது.
46 நாடுகளைச் சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட நபர்களால் உருவாக்கப்பட்ட ‘Born Too Soon: Decade of Action on Preterm Birth’ என்ற தலைப்பிலான இந்த அறிக்கை, PMNCH எனும் பெண்கள், குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கான உலகின் மிகப்பெரிய கூட்டணி அமைப்புடன், உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF) ஆகியவை இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை குறைப்பிரசவம் மூலம் பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியக் குறைபாடு குறித்த எச்சரிக்கை ஒலியை எழுப்புகிறது.
2010ல் 9.8%-ஆக இருந்த உலகளாவிய குறைப்பிரசவ விகிதம், 2020ல் 9.9%-ஆக அதிகரித்துள்ளது. எண்ணிக்கை அளவில் 2020ல் 13.4 மில்லியன் குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறந்துள்ளன. இதில் கிட்டத்தட்ட 1 மில்லியன் குழந்தைகள் குறைப்பிரசவ சிக்கல்களால் இறக்கின்றன. அதாவது, உலகம் முழுவதும் 10ல் 1 குழந்தை குறைப்பிரசவத்தில் (கர்ப்பத்தின் 37 வாரங்களுக்கு முன்) பிறக்கின்றன.
2020ம் ஆண்டில், வங்காளதேசத்தில் அதிகபட்சமான குறைப்பிரசவ விகிதம் (16.2%) மதிப்பிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் மலாவி (14.5%) மற்றும் பாகிஸ்தான் (14.4%) உள்ளன. கிரீஸ் (11.6%), மற்றும் அமெரிக்கா (10.0%) போன்ற அதிக வருவாய் கொண்ட நாடுகளில் இந்த விகிதங்கள் அதிகமாக உள்ளன.
இந்த அறிக்கை, 2020ம் ஆண்டில் குறைப்பிரசவ குழந்தைகளின் பிறப்பு விகிதம் கிட்டத்தட்ட பாதி அளவு(45%) இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா, சீனா மற்றும் எத்தியோப்பியா ஆகிய ஐந்து நாடுகளில் மட்டுமே உள்ளதாக கூறுகிறது. இதில், மனித மோதல்கள், காலநிலை மாற்றம், கோவிட்-19 மற்றும் வாழ்க்கைச் செலவு நெருக்கடி ஆகிய சிக்கல்களில் சிக்கிய பெண்கள் மற்றும் குழந்தைகளே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கை விவரிக்கிறது.
1.2 மில்லியன் குறைப்பிரசவ குழந்தைகள், மனிதர்களால் ஏற்படக்கூடிய நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள உலகின் மிகவும் பலவீனமான 10 நாடுகளில் மட்டுமே பிறப்பதாகவும், இந்நாடுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான பராமரிப்பு கிடைக்காததே இதற்குக் காரணம் என்றும் அறிக்கை கூறுகிறது.
அறிக்கையின் முக்கிய மேற்கோளாக இதுபோன்ற மோதல்களைத் தடுப்பதும், காலநிலை மாற்றத்திற்குத் தீர்வு காணும் கொள்கைகள் மற்றும் திட்டங்களில் அதிக முதலீடு செய்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான கவனத்தை அதிகரிப்பதும் உள்ளன.


























