அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா சனிக்கோளின் நிலவினை ஆராய பாம்பு வடிவ ரோபாவை விண்வெளிக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. எக்ஸோபயாலஜி எக்ஸ்டன்ட் லைஃப் சர்வேயர் என அழைக்கப்படும் இந்த வடிவமைப்பு நாசாவின் ஜெட் ப்ரபல்ஷன் ஆய்வகத்தில் இருந்து வெளிவருகிறது.
நெகிழ்வான மற்றும் நீடிக்கும் தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ அங்குள்ள மணல், பாறை மற்றும் பனி உள்ளிட்ட கடினமான நிலப்பரப்புகளில் செல்லும்படியாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ரோபோ சனிக்கோளின் நிலவுகளில் ஒன்றான Enceladus-க்கு அங்கு மனித உயிர்கள் ஏதேனும் வாழ்கின்றனவா என்பதைப் பரிசோதிப்பதற்காக அனுப்பப்படுகிறது. இந்தத் திட்டம் நாசாவின் காசினி திட்டத்தின்போது சனியின் நிலவிலிருந்து நீராவி வெளியேறிய பின்னர் தொடங்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. அதன்படி, நிலவின் கடினமான பனிக்கட்டிகளுக்கு கீழே அதிகப்படியான நீர் இருக்கலாம் என்றும், அதில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்றும் நாசா கருதுகிறது.
நிலவின் மீதான சீரற்ற நிலப்பரப்பு மற்றும் சிறிய பிளவுகள் வழியாக ரோபோ இயங்கும் விதமாக, நாசா குழு அதை சுழலும் திருகுகள் மூலம் பொருத்தியுள்ளது. இதன்மூலம் பனிக்கட்டியின் கட்டமைப்புகளுக்கு ஏற்றார்போல் ரோபோவால் செயல்படவும் முன்னேறவும் முடியும். மேலும் ரோபோ எதிர்கால விண்வெளி ஆய்வு திட்டங்களுக்கு வழி வகுக்கும் என்றும், பல்வேறு சூழல்களிலும் பொருந்தும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் நாசா தெரிவிக்கிறது.
இதன் வடிவமைப்புக்குழு தற்போது இந்த பாம்பு வடிவ ரோபோவை இறுதிக்கட்ட சரிபார்ப்புகளுக்கு ஆட்படுத்தியுள்ளது. மேலும் இது நிலவின் நிலப்பரப்பு மீது எவ்வாறு செயல்படலாம் என்ற சோதனைகளின் முடிவுகளையும் மதிப்பாய்வு செய்துவருகிறது.


























