கேரளாவில் வாழும் இந்துக்கள் இஸ்லாமியர்களாக மதமாற்றம் செய்யப்படுவதாகக் கூறி நேற்றைய தினம் ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியான நிலையில், உண்மையில் கேரளாவில் நிகழ்ந்த சில உணர்ச்சிப்பூர்வமான ஸ்டோரிகளை நெட்டிசன்கள் வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.
இந்தி பட இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் நேற்றைய தினம் வெளியாகியுள்ளது. இதன் டீசர் வெளியான சமயமே இதற்கான எதிர்ப்புக்குரல்கள் துவங்கிவிட்ட நிலையில், இதன் டிரெய்லர் வெளியாகி சர்ச்சைகளை மேலும் அதிகப்படுத்தியது. தொடர்ந்து, இப்படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டி வழக்குகள் தொடரப்பட்டும், எதிர்ப்புகளை மீறி இத்திரைப்படம் வெளியானது.
கேரளாவில் வாழும் இந்து மற்றும் கிறித்துவ சமூகத்தினரை இஸ்லாமியர்களாக மாற்றி ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளுடன் அவர்களை இணைக்கும் செயல் நடைபெற்றுவருவதாகவும், இதுவரை இவ்வாறாக 32,000 பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஆப்கானிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளுக்கு கடத்தப்பட்டதாகவும் பகீரவைக்கும் குற்றச்சாட்டுகளுடன் இப்படம் வெளியாகியுள்ளது. எனவே தான் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இப்படம் முன்வைப்பதாகவும், மக்கள் மனதில் வெறுப்பை விதைக்க திட்டமிட்டு வெளியிடப்பட்டுள்ளதாகவும் கண்டனக்குரல்கள் தொடர்ந்து கொடுக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், கேரளாவின் நடந்த ரியல் லைஃப் ஸ்டோரி ஒன்றைக் குறித்து நெட்டிசன் ஒருவர் புகைப்படத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் கேரளாவின் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த அப்துல்லா, கதீஜா என்ற இஸ்லாமியத் தம்பதி, பெற்றோரை இழந்த 10 வயது இந்து சிறுமி ஒருவரை தத்தெடுத்ததாகவும், அவருக்கு 22 வயது பூர்த்தியான நிலையில், இந்து இளைஞர் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்ததாகவும், இவ்வாறாக பல இந்து, முஸ்லிம் நல்லிணக்கத்தை போதிக்கும் சம்பவங்கள் கேரளாவில் நடந்துள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.
இவரது பதிவு இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்தப் பதிவிற்குக் கீழான கருத்துகளில் அண்மையில் கேரளாவின் ஒரு மசூதியில் இந்து மணமக்களுக்கு இந்து முறைப்படி நடத்திவைக்கப்பட்ட திருமணத்தின் வீடியோ, கேரளாவின் ஒரு கடையில் புர்கா அணிந்த பெண் ஒருவர் இந்து தோழி ஒருவருக்கு அன்போடு உணவு ஊட்டும் வீடியோ ஆகியவற்றை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.


























