தொழில்நுட்ப வளர்ச்சியில் புதிதாக களமிறக்கப்பட்டு வரவேற்பையும் ஊடாகவே சிறு அதிருப்தியையும் பெற்றுவரும் தொழில்நுட்பம் AI (Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவு. எதிர்காலத்தில் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை சுலபமாக செய்துவிடும் என்பதால் இதற்கு வரவேற்பும், அதே காரணத்தால் எங்கு மனிதர்கள் செய்யும் வேலைக்கு ஆப்பு வைத்து அவர்களது வாழ்வாதாரத்தில் மணல் அள்ளிப் போட்டுவிடுமோ என்ற ரீதியில் அதிருப்தியுமாக இதன் வளர்ச்சி தொடர்கிறது.
இந்நிலையில், AI-ன் சமீபத்திய செயல்பாடு ஒன்றைக் காட்டும் காணொலியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான், இந்தக்கால இளைஞர்களை எண்ணி பரிதாபப்படுவதாகவும், அவர்கள் ஒரே நேரத்தில் ஆசிர்வதிக்கப்பட்டும் சபிக்கப்பட்டும் உள்ளனரோ? என்றும், காலம் தான் இதற்கெல்லாம் விடையளிக்கும் என்றும் கருத்திட்டுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் இந்தக் கவலைக்கு என்ன காரணம்?
அவர் பகிர்ந்துள்ள காணொலி, சீனா எவ்வாறு AI தொழில்நுட்பத்தைப் பள்ளிகளில் பயன்படுத்துகிறது என்பதைக் காட்டுகிறது. அதாவது, சீனாவின் ஒரு பள்ளியில் மாணவர்களின் தலையில் அவர்களின் கவனிப்புத் திறனை கண்காணிக்கவேண்டி AI மூலம் இயங்கும் ஒரு சிறிய கருவி பொருத்தப்படுகிறது. அந்தக் கருவி மாணவர்கள் வகுப்பை கவனிக்கிறார்களா?, அல்லது வேறு சிந்தனையில் இருக்கிறார்களா? என்று ஆராய்கிறது.
இவ்வாறு கவனிக்கப்படும் தகவல்கள் அந்தக் கருவியின் ஊடாக ஆசிரியருக்கும், மாணவர்களின் பெற்றோருக்கும் அனுப்பப்படுகிறது. இந்தத் தகவல்களை ஆதாரமாக வைத்து மாணவன் படிக்கிறானா?, வகுப்பை கவனிக்கிறானா? போன்ற தகவல்களை பெற்றோரும் ஆசிரியரும் தெரிந்துகொள்ளமுடியும். இதுமட்டுமல்லாது வகுப்புகளில் வைக்கப்படும் சில ரோபோக்களும் மாணவர்களின் நடவடிக்கைகளை ஒவ்வொரு நொடிக்கும் கவனித்து தகவல்களை உள்வாங்கிக்கொண்டு அவற்றை ஆசிரியர்களுக்குக் கொடுக்கிறது.
இதைக் குறிப்பிட்டு தான் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படியான ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார். என்னதான் எதிர்காலத்தில் AI தொழில்நுட்பம் புரட்சியை ஏற்படுத்தி வேலைகளைச் சுலபப்படுத்தும் என்றாலும், ஏதோ ஒருவிதத்தில் தனிமனித சுதந்திரத்தைப் பறித்து, ஒருவித பாதுகாப்பின்மையை கொடுக்கிறது என்பதும் மறுப்பதற்கில்லை.


























