காலத்திற்கேற்றார்போல் மனிதர்களின் ஒவ்வொரு செயல்முறையும் மாற்றமடைந்துவருகிறது. தொழில் நுட்பத்தின் வாயிலாக இருந்த இடத்திலிருந்தே ஒரு நபர் மற்றொரு நபரிடம் தொடர்பு கொள்ளவும், நேரில் செல்லாமலேயே வேலைகளை சுலபமாகச் செய்துவிடவும் முடிகிறது. அந்த வகையில் ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதரோடு மட்டுமில்லாமல் நாம் வணங்கும் கடவுளுடன் கூட தொழில்நுட்பங்களால் விரைந்து தொடர்பு கொள்ள முடியும் என்று நம்பி சீனர் ஒருவர் ஒரு வினோதமான வேலையில் இறங்கியுள்ளார்.
சீனாவைச் சேர்ந்த ஜாங் என்ற 27 வயது இளைஞர் சுமார் 2,000 கி.மீ. பயணித்து சிச்சுவான் பகுதியிலுள்ள 71 மீட்டர் உயரமான பெரிய புத்தர் சிலையை வழிபாடு செய்ய வந்துள்ளார். அங்கு வந்த அவர் தனது வேண்டுதலை நிறைவேற்ற தான் கொண்டு வந்த, காதுகளில் பாடல் கேட்க அணியும் ஏர்பாட் வடிவிலான ஸ்பீக்கரை புத்தர் சிலையின் காதுகளுக்கு அருகில் கொண்டு போய் வைத்துள்ளார். எதற்காக என்கிறீர்களா?
பொதுவாக கடவுளிடம் வேண்டும் மனிதர்கள் மனதுக்குள்ளாகவோ அல்லது மெல்லிய தொனியிலோ தனது தேவைகளைக் கேட்பதுண்டு. ஆனால் அவற்றில் நம்பிக்கையில்லாத ஜாங், ஸ்பீக்கர் மூலமாக தனது தேவைகளை சத்தம் போட்டு கத்தி புத்தர் சிலையிடம் வேண்டியுள்ளார். (என்னவொரு புத்திசாலித்தனம்!
இவ்வாறு கடவுளிடம் ஜாங், ’’புத்தரே… உங்களுக்குத் தெரியுமா? எனக்கு 27 வயதாகிறது. எனக்கு சொந்தமாக காரோ, வீடோ, ஏன்? கேர்ள் ஃப்ரண்டோ கூட இல்லை. எனக்கு பணம், கேர்ள் ஃபிரெண்ட் எல்லாம் வேண்டும்’’ என்று தனது விருப்பங்களை பட்டியலிட்டுள்ளார்.
மேலும், ’’முதலில், நான் பணக்காரனாக வேண்டும். எனக்கு அதிகம் தேவையில்லை. 10 மில்லியன் யுவான் (ரூ.11.81 கோடி) போதும். மிக முக்கியமாக, எனக்கு ஒரு காதலி வேண்டும். அவள் கொஞ்சம் அழகாகவும், மென்மையாகவும், 10 மில்லியன் யுவானை விட என்னை நேசிப்பவளாகவும் இருக்கவேண்டும்” என்று ஜாங் தனது வேண்டுதலை புத்தரிடம் மேலும் நீட்டித்துள்ளார்.
நம் ஊரில் செவ்வாய் தோஷம் போல, ’மெர்க்குரி ரெட்ரோகிரேட்’ என்ற ஜோதிட நிகழ்வின் காரணமாக தனக்கு பிரச்சினைகள் ஏற்படுவதாகக் கருதிய ஜாங், புத்தரிடம் தனது தேவைகள் மற்றும் ஏக்கங்கள் குறித்து ஸ்பீக்கர் சகிதமாக முறையிட்டுள்ளார். அவர் இவ்வாறு வேண்டுதல் வைக்கும் காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.


























